செங்காங்கில் புதன்கிழமை காலை ஒரு வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு கைக்குழந்தை, இரண்டு பிள்ளைகள் உட்பட ஐவர் காயமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிக்கும் 50 பேரைக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியேற்றியது.
செங்காங் ஈஸ்ட் அவென்யூ, புளோக் 280ஏயின் நான்காம் தளத்திலுள்ள வீட்டில் இந்தத் தீச்சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து புதன்கிழமை காலை 2.45 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
செங்காங் தீயணைப்பு நிலையமும் பொங்கோல் தீயணைப்பு நிலையமும் இணைந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தன. புகைமூட்டத்தாலும் தீயினாலும் அந்த வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்த ஐவரையும் தீயணைப்புப் படை மீட்டது. அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பெரியவர்களில் ஒருவருக்கு லேசானத் தீக்காயம் ஏற்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில், சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.