மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், தொடக்கநிலை பராமரிப்புச் சேவை அத்தியாவசியமாகி உள்ளது.
அதனால், சிங்கப்பூர் தொடக்கநிலை பராமரிப்புத் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து அதை வலுப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
இதில் கூடுதல் பயிற்சிகள் மேற்கொள்ளும் குடும்ப மருத்துவர்களை நிபுணர்களாக அங்கீகரிப்பதும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதில் மற்றொரு நடவடிக்கை, ‘நேஷனல் எலக்டிரானிக் ஹெல்த் ரொக்கார்டு’ என்ற தேசிய சுகாதாரப் பதிவகத்தில் அனைத்து மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கட்டாயமாக இணைப்பது என்று அவர் சொன்னார். இந்தப் பதிவகம் நோயாளிகளின் அனைத்து முக்கியமான தரவுகளையும் கொண்டிருக்கும்.
இந்த தேசியப் பதிவகம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால், 10 விழுக்காடு தனியார் மருந்தகங்கள், மருத்துவமனைகளே இந்தத் திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் பங்குபெறவில்லை. இதன் தொடர்பில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டம் இயற்றி இவை யாவும் நோயாளிகளின் தரவுகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
“இந்தத் தகவல்களைக் கொண்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் செய்வது தவிர்க்கப்படும். இதனால் நேரம் மிச்சமாகும், விரைவாக மருத்துவ முடிவுகள் எடுக்க முடியும்,” என்று திரு ஓங் விளக்கினார்.
இதில் பங்குபெற விருப்பமில்லாத நோயாளிகள் இதிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
ஆசிய, பசிபிக் குடும்ப மருத்துவர்கள் அமைப்பில் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) பேசிய அமைச்சர் ஓங், சிங்கப்பூர் குடும்ப மருத்துவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முதலீடு செய்யும் என்று அவர் விளக்கினார்.

