ஆசியான் குடும்பங்களின் நிலவரம் குறித்த முதலாவது அறிக்கை வெளியீடு

குடும்பம் எனும் உயிர் நாடி

ஆசியான் குடும்பங்களின் நிலவரம் குறித்த முதலாவது அறிக்கை வெளியீடு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2026 - 12:09 pm

3 mins read

ஆசியக் குடும்பங்களின் கதை இனி ஆசிய நாட்டவர்களின் குரலிலேயே சொல்லப்படும். ஆசிய குடும்ப மாநாடு 2026ல் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி முதலாவது ஆசியான் குடும்பங்கள் நிலை அறிக்கையை வெளியிட்டபோது அந்தப் புதிய அத்தியாயம் தொடங்கியது.

ஆசியான் வட்டாரத்தில் உள்ள குடும்பங்களின் நிலை, மாற்றங்கள், சவால்கள் குறித்த முதலாவது விரிவான அறிக்கையை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) காலை தொடங்கிய ஆசிய குடும்ப மாநாட்டில் வெளியிட்ட அவர், குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஆதரவுச் சேவைகளைத் தனித்தனியாக வழங்காமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாறும் குடும்பம், மாறாத பாசம்

அறிக்கை சொல்லும் முதல் உண்மை மாற்றம். பெரும்பாலான ஆசியான் நாடுகளில் திருமணம் தாமதமாகிறது, குழந்தை பிறப்பு குறைகிறது. ஆனால், இந்த மாற்றத்துக்கு நடுவிலும் குடும்பம் தளரவில்லை. மாறாக, இன்னும் உறுதியாக நிற்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் மிதமானது முதல் உயர்ந்த அளவு வரை நல்வாழ்வையும் நல்ல வாழ்க்கைத் தரத்தையும் கொண்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையே, அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய அமைச்சர் மசகோஸ், வலுவான குடும்பங்களே சமூகத்தின் அடித்தளம் என்றார். இன்றைய காலகட்டத்தில் மக்கள்தொகை மூப்படைதல், குடும்ப அளவு குறைதல், தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையிலும், பராமரிப்புப் பொறுப்புகளிலும் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டினார். 

தற்போதைய சமூகச் சேவை அமைப்பில், ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தை, பெற்றோரின் பிரச்சினைகளை வெவ்வேறு நிபுணர்கள் தனித்தனியாகக் கையாளும் நிலை உள்ளதாக குறிப்பிட்ட அவர், “இதற்கு மாற்றாக அனைத்து நிபுணர்களும் ஒரே குழுவாக இணைந்து, ஆரம்ப நிலையிலேயே தலையிட்டு முழுமையான தீர்வை வழங்கும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது,” என்றும் சொன்னார்.

ஆசியக் குடும்பங்களின் உண்மையான வாழ்வியல் சூழலைப் புரிந்துகொள்ள மேலைநாட்டு ஆய்வுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், வட்டார அளவிலான தரவுகளை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஆசியான் நாடுகளில் திருமணம் தாமதமாவதும், பிறப்பு விகிதம் குறைவதும் முக்கிய மாற்றங்களாகப் பதிவாகியுள்ள போதிலும், வட்டாரத்தில் உள்ள குடும்பங்கள் வலுவான பிணைப்புடனும், நல்ல வாழ்க்கைத் தரத்துடனும் மீள்திறன் கொண்டவையாகத் திகழ்வதாக இந்த அறிக்கை நம்பிக்கை நல்கியது.

குறிப்பாக, தனிக்குடும்பங்கள், மூன்று தலைமுறைகள் இணைந்து வாழும் கூட்டுக் குடும்பங்கள் அதிக மீள்திறனுடன் இருப்பதாகவும் அதிக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அக்கறையும் அமைச்சர் உரையில் இடம்பிடித்தது.

அறிக்கையோடு நிற்காத பயணம்

இந்த அறிக்கை முடிவன்று, தொடக்கம் மட்டுமே என்ற அமைச்சர் மசகோஸ், இந்த ஆய்வு முடிவுகளைக் கொள்கைகளாகவும் செயல்பாடுகளாகவும் மாற்றுவதன் மூலம், மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வளரும் வலுவான ஆசியான் குடும்பங்களை உருவாக்க முடியும் என்றார்.

வருங்கால ஆய்வுகள் மூலம் குடும்பப் போக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் பெற்றோர் பராமரிப்பு, குடும்ப மீள்திறன் குறித்த ஆய்வுகள் இன்னும் ஆழமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரு மசகோஸ், சமூகச் சேவைகளின் தரத்தை உயர்த்த செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் தலைமையில் முதலாவது உயர்மட்டத் தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் அறிவித்தார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசியான் உறுப்பு நாடுகள், கல்வி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பயனாக இந்த முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்குடும்பம்சிங்கப்பூர்ஆசியான்