தீச்சம்பவத்தில் உயிரிழந்த முதியவரின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுப்பு

தீச்சம்பவத்தில் உயிரிழந்த முதியவரின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுப்பு

1 mins read
1f704fab-b1ab-4d47-9493-fc65e38388f5
சர்க்கிட் ரோடு, புளோக் 39ன் ஒன்பதாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜூலை 28ஆம் தேதி தீ மூண்டது. - படம்: ஃபேஸ்புக் / சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) மூண்ட தீச்சம்பவத்தில் உயிரிழந்த 70 வயது முதியவரின் உடலைப் பெற்றுக்கொள்ளவோ இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைச் செய்யவோ அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

சர்க்கிட் ரோட்டில் உள்ள புளோக் 39ன் ஒன்பதாவது தளத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2.05 மணி அளவில் அந்தத் தீச்சம்பவம் ஏற்பட்டது. அந்த முதியவர் சுயநினைவிழந்த நிலையில் காணப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 80 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மரீன் பரேட் - பிரேடல் ஹயிட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங், அந்தச் சம்பவம் பற்றித் தாம் அறிந்ததாகவும் தமது குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார்.

தமது குழுவினர் ஜூலை 29ஆம் தேதி குடியிருப்பாளர்களை நேரில் சென்று சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த முதியவர் தமது குடும்பத்தினரைப் பிரிந்துத் தனியாக வாழ்ந்துவந்ததாகவும் மூத்தோர் ஆதரவுத் திட்டத்தின் நிதியுதவியை நம்பியிருந்ததாகவும் திருவாட்டி டின் கூறினார்.

அவரது இறப்புக்குப் பிறகு அதிகாரிகள் அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டபோது, உடலைப் பெற்றுக்கொள்ளவோ இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ விருப்பமில்லை என்று அவர்கள் தெரிவித்துவிட்டதாகத் திருவாட்டி டின் சொன்னார்.

“நாங்கள் செங் ஹோங் நலச் சங்கத்தைத் தொடர்புகொண்டுள்ளோம். அவர்கள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு உதவி செய்வார்கள். மேலும், அவர் சேர்த்து வைத்திருந்த ஏராளமான பொருள்களை அகற்றுவதற்கும் நாங்கள் உதவி செய்வோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்