1970களில் சிங்கப்பூரின் மெக்பர்சன் லேன் பகுதியில் வசித்த உஷா ராணி, தம் பெற்றோர், மூன்று சகோதரர்களுடன் இணைந்து, இயோ சூ காங் கம்பத்தில் இருந்த தம் பாட்டியின் வீட்டுக்குச் சென்று பொங்கல் திருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.
அந்தக் கொண்டாட்டத் தருணங்களை தமது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான காலங்களாக நினைவுகூர்கிறார் திருவாட்டி உஷா.
“இயோ சூ காங் கம்பத்தில் கிட்டத்தட்ட இருபது குடும்பங்கள் வசித்து வந்தன. அவற்றில் பெரும்பாலானவை இந்தியக் குடும்பங்கள்.
“பொங்கல் பண்டிகையைக் கொண்டாடு அந்தத் திருநாளுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக, பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்க அந்த கம்போங்கில் உள்ள குடும்பங்கள் சிராங்கூன் சாலைக்கு ஒன்றாகச் செல்வார்கள்,” என்று அவர் சொன்னார்.
அண்டை வீட்டாருடனும் தம் பாட்டியுடனும் சிராங்கூன் சாலையில் உள்ள கடைகளுக்குச் சென்று, அந்த வட்டாரத்திலேயே அனைத்துப் பொருள்களையும் வாங்கியதாகத் திருவாட்டி உஷா கூறினார்.
பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து போன்ற பாரம்பரியப் பொருள்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்கான அவரது பாட்டியின் பட்டியலில் தவறாமல் இடம்பெற்றிருந்தன.
“பொங்கல் திருநாளன்று அதிகாலையில் எழுந்து, வீட்டைச் சுத்தம் செய்து, கம்பத்தில் இருந்த அனைத்துக் குடும்பங்களும் தங்கள் வீட்டுச் சமையலறைகளில் இருந்த விறகு அடுப்பில் பல்வேறு வகையான பொங்கல் சமைத்து ‘பொங்கலோ பொங்கல்’ என மகிழ்ச்சியுடன் குலவையிட்டுக் கொண்டாடுவார்கள்,” என்று விவரித்தபடியே அந்நினைவுகளில் மூழ்கினார் திருவாட்டி உஷா.
மேலும், நண்பகல் உணவுக்காக தம் பாட்டியும் அண்டை வீட்டாரும் சேர்ந்து திட்டமிட்டு வெவ்வேறு வகையான உணவுகளைச் சமைப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பலவகைக் காய்கறி சாம்பார், கத்தரிக்காய், வாழைக்காய் வறுவல் போன்றவை கம்போங் முழுவதும் கமகமக்கும்.
கரும்பு, வடை, சாம்பார், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை அனைவரும் பகிர்ந்து, வாழை இலையில் பரிமாறி உண்போம் என்றார் திருவாட்டி உஷா.
“கம்பத்து வாழ்க்கையின் எளிமையும் ஒற்றுமையோடு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதும் அன்றுபோல இன்று இல்லை.” என்றும் அவர் சொன்னார்.
இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை பரபரப்பாகிவிட்டதால் அக்காலத்தைப்போல் இப்போது பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை என்கிறார் திருவாட்டி உஷா.
ஆயினும், இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளை அவர் தமது வீட்டிலேயே சிறப்பாகக் கொண்டாடுகிறார்.
திருவாட்டி உஷா, தற்போது தம் இரு பிள்ளைகளுடன் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் வசிக்கிறார்.
பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தையும் குடும்ப ஒற்றுமையையும் சமூகப் பிணைப்பின் அவசியத்தையும் அவர் தம் பிள்ளைகளிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்கிறார்.
அந்த மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் குடும்பத்திற்கு முக்கியப் பங்கு உண்டு என்பது திருவாட்டி உஷாவின் உறுதியான எண்ணம்.

