வேலையிட விபத்தில் 23 வயது தமிழக ஊழியர் மரணம்; விளக்கம் கேட்கும் குடும்பத்தார்

டிசம்பர் 2ஆம் தேதி நிகழ்ந்த வேலையிட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கட்டுமான ஊழியர் பொன்ராமன் ஏழுமலை உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து அவருடைய உறவினர்கள் விளக்கம் கேட்கின்றனர்.

கான்கிரீட் விசைக்குழாய் உதவியாளராக சிங்கப்பூரில் வெறும் எட்டு மாதங்களாக வேலை செய்து வந்த திரு ஏழுமலை, அந்த விசைக்குழாய் டிரக்கின் அடிச்சட்டத்திற்கும் விசைக்கட்டைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

எண் 770 ஜூரோங் சாலையில் தெங்கா ஒருங்கிணைந்த ரயில், பேருந்து பணிமனை கட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள கட்டுமானத் தளத்தில் டிசம்பர் 2ஆம் தேதி இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

‘டிஎம்சி கான்கிரீட் பம்ப்பிங் சர்வீசஸ்’ நிறுவன ஊழியரான திரு ஏழுமலை, ஃபேரர் பார்க் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயங்கள் காரணமாக அடுத்த நாள் அவர் அங்கு உயிரிழந்தார். அவருக்கு என்ன காயங்கள் ஏற்பட்டன என்பது பற்றி அதிகாரிகள் கூறவில்லை.

இந்நிலையில், இந்த விபத்து குறித்த அறிக்கையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்டது.

அந்தக் கட்டுமானத் திட்டத்தின் பிரதான ஒப்பந்ததாரரான ‘சைனா ரயில்வே 11 பியுரோ குரூப் கார்ப்பரேஷன்’ (சிங்கப்பூர் கிளை), திரு ஏழுமலையை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல தனியார் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கான்கிரிட் டிரக்கின் பின்னால் நின்ற திரு ஏழுமலை, எஃகு தட்டை நகர்த்திக்கொண்டிருந்ததாக அறிக்கை கூறியது. விபத்துக்குப் பிறகு அந்த டிரக்கில் இருந்து நடந்து சென்ற அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

திரு ஏழுமலையின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அவருடைய குடும்பத்தார் மனமுடைந்து போயுள்ளதாக சிங்கப்பூரில் வேலை செய்யும் அவருடைய உறவினர்கள் இருவர் கூறினர்.

இச்சம்பவம் பற்றிப் பேசுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்த அச்சம் காரணமாக தங்களது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என அவ்விருவரும் கேட்டுக்கொண்டார்.

தம் குடும்பத்தில் வேலை செய்த ஒரேயொருவரான திரு ஏழுமலை, தம்முடைய தாத்தா, பெற்றோர், அக்கா, 13 வயது தம்பி ஆகியோருக்கு ஆதரவளித்ததாக உறவினர்கள் கூறினர்.

இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள திரு ஏழுமலையின் குடும்பத்தார், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்வர் என நம்புகின்றனர்.

“ஏன் ஆம்புலன்சை அழைக்கவில்லை, ஏன் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படவில்லை? அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.

“ஏழுமலையை நாங்கள் இழந்துவிட்டோம். எதிர்காலத்தில் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது,” என உறவினர்கள் கூறினர்.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து ஐந்து, 10 நிமிட தூரத்தில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை உள்ளது.

திரு ஏழுமலை அறிவார்ந்தவர், கற்க ஆர்வம் இருந்தவர் என வர்ணித்த அவருடைய உறவினர்கள், அவருக்குச் சிறந்த எதிர்காலம் இருந்ததாகக் கூறினர்.

இயந்திரப் பொறியியல் துறையில் பட்டயக் கல்வி முடித்த திரு ஏழுமலை, நவம்பரில் ‘கிளாஸ் 2பி’, ‘3சி’ ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றார். அடுத்து ‘கிளாஸ் 3’ உரிமம் பெறுவதற்கு அவர் பயிற்சி மேற்கொள்ளவிருந்தார்.

அவரது மரணத்தால் அவருடைய குடும்பத்துக்கு பல்லாயிரக்கணக்கான வெள்ளி கடன்சுமை ஏற்பட்டுள்ளது. திரு ஏழுமலையைப் படிக்க வைக்கவும் சிங்கப்பூரில் அவர் வேலை செய்வதற்குரிய கட்டணம் செலுத்தவும் குடும்பத்தார் கடன் தொகையைப் பயன்படுத்தி இருந்தனர்.

“எங்கள் குடும்பம் அவதியுறுகிறது. இதிலிருந்து எப்படி மீள்வோம் என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. தினமும் நாங்கள் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். எங்களால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை,” என்று அந்த இரு உறவினர்களும் கூறினர்.

இந்நிலையில், தெங்கா பணிமனை திட்ட மேம்பாட்டாளரான நிலப் போக்குவரத்து ஆணையம், இந்த விபத்து குறித்து தான் வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டது.

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவ ‘டிஎம்சி கான்கிரீட் பம்ப்பிங் சர்வீசஸ்’ நிறுவனத்துடனும் பிரதான ஒப்பந்ததாரருடனும் தான் பணியாற்றி வருவதாக அது சொன்னது.

“மனிதவள அமைச்சு, காவல்துறை விசாரணைக்கும் நாங்கள் உதவி வருகிறோம்,” என்று ஆணையம் கூறியது.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த விபத்தில் சந்தேகப்படும்படி எதுவும் கண்டறியப்படவில்லை எனக் காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!