மலேசிய ஆடவரின் சிகிச்சைச் செலவுக்கு பொதுமக்களின் உதவியை நாடுகிறது குடும்பம்

மலேசிய ஆடவரின் சிகிச்சைச் செலவுக்கு பொதுமக்களின் உதவியை நாடுகிறது குடும்பம்

1 mins read
3cec3adc-e948-4ed5-92f7-f4ab00be73cd
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அகிஃப் ஸார் உகாஸ்யா ஷுஹைமி, 28. - படம்: பெர்னாமா

சிங்கப்பூரில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மலேசிய ஆடவரின் மருத்துவச் செலவுக்கு அவரது குடும்பம் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளது.

அகிஃப் ஸார் உகாஸ்யா ஷுஹைமி, 28, எனப்படும் அவர், கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 17) வேலை முடிந்து ஜோகூர் பாருவில் உள்ள தமது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றபோது ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்தில் சிக்கினார்.

மற்றொரு விபத்தைத் தவிர்க்க முயன்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர் மீது பெரிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஏறியது.

அதன் விளைவாக, அவரது முகுதுத் தண்டில் பலத்த காயமும் இடது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டன. நுரையீரல் காயங்களால் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அகிஃப்பை மேல் சிகிச்சைக்காக ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மாற்ற அவரது குடும்பம் முயன்றுள்ளது.

ஆனால், அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மொத்த மருத்துவச் செலவில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அவரது மனைவி நூர் சைஹிரா முகம்மது ஸோஹிர் தெரிவித்து உள்ளார்.

அக்டோபர் 23ஆம் தேதி வரை $110,537.60 (ஏறக்குறைய 363,668 ரிங்கிட்) மருத்துவச் செலவு ஆகியுள்ளது.

அதனால் கலக்கத்தில் இருக்கும் அகிஃப்பின் குடும்பம் பொதுமக்களின் உதவியை நாடி இருப்பதாக ‘மலாய் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்