குடும்ப வன்முறை: பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு வழங்கும் புதிய நிலையம்

2 mins read
c95d2d66-a2f1-4a44-b7a9-e0f6339f54a0
புதிய நிலையத்தில் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் ஒரே இடத்தில் நேரடிப் பரிந்துரைகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு வழங்க காசா ரௌடா எனும் அறநிறுவனம் புதிய நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது.

அறநிறுவனத்தின் முதல் நிலையம் சனிக்கிழமை (பிப்ரவரி 22) பிடோக்கில் திறக்கப்பட்டது.

தங்களை அடித்துத் துன்புறுத்தும் கணவன்மார்கள் அல்லது தந்தைமார்களிடமிருந்து தப்பிக்க முற்படும் பெண்கள் தேவையான உதவி பெற இந்த நிலையம் வகை செய்யும்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு காசா ரௌடா அடைக்கலம் தருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அது 600க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கு உதவி செய்துள்ளது.

புதிய நிலையத்தில் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் ஒரே இடத்தில் நேரடிப் பரிந்துரைகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு முன்பு, குடும்பச் சேவை நிலையங்கள், மருத்துவமனைகள், காவல்துறை, இதர சமூக அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து பாதிக்கப்பட்டோர் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர் காஸா ரௌடா அறநிறுவனத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம்.

அவர்களது பாதுகாப்பு குறித்து திட்டமிடப்படும். பிறகு அவர்களுக்கான தங்கும் இடத்துக்கு ஏற்பாடு செய்து தரப்படும். பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து நிர்வாகப் பணிகளும் நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

குடும்ப உறுப்பினர்களைத் துன்புறுத்துவர்கள் மனம் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை நிலையத்தில் சந்திக்கலாம். பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு முன்பு இத்தகைய சந்திப்புகள் வெளி இடங்களில் நடத்தப்பட்டன.

நிலையத்தில் திறப்பு விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார். வலுவான உறவு கொண்ட குடும்பங்கள் சமுதாயத்தின் ஆணிவேர் என்று அவர் கூறினார். சிறுவர்கள் ஆரோக்கியமாக வளர அது மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

“குடும்ப வன்முறையால் சிறுவர்கள் பேரளவில் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப வன்முறைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பும் பரிவும் முக்கியம் என்று குடும்பங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பது பெற்றோர் ஒவ்வொருவரின் கடமை,” என்று திரு ஹெங் கூறினார்.

குடும்ப வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து உடனடியாகப் புகார் அளிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

புகார் அளிக்காவிடில் அப்பிரச்சினை நாளுக்கும் நாள் மோசமடையும் என்றார் திரு ஹெங்.

புதிய நிலையம் அமைந்த இடம் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இதற்காக அது அறிநிறுவனத்திடமிருந்து வாடகை வசூலிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்