சிங்கப்பூரின் வாடகை வாகன வர்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனமாகிய ‘கிராஃப்’ 2026ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதிமுதல் அதன் பயணக் கட்டணத்தை 30 காசு உயர்த்தவுள்ளது.
தற்போதுள்ள 90 காசிலிருந்து பயணிகள் $1.20 காசு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் என்று அந்நிறுவனம் புதன்கிழமை மின்னஞ்சலில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு ஓட்டுநர்களுக்கும் அவர்களின் நிறுவனங்களுக்கும் மத்திய சேமநிதிக் கட்டணங்களை செலுத்த உதவும்.
இணையத்தள ஊழியர்கள் சட்டப்படி, அவர்களும் அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களும் மசேநிதி சந்தாக்கள் செலுத்தவேண்டும் என்று கிராஃப் நிறுவனம் குறிப்பிட்டது.
மசேநிதி சந்தாக்களோடு, கட்டண உயர்வு, இணையத் தளங்களைப் பராமரிக்கவும், சேவை மேம்பாடுகளுக்கும், ஊழியர் நலத் திட்டங்களுக்கும் பயன்படும்.
கட்டண உயர்வு, தற்போது வாகனப் பயணங்களுக்கு மட்டும் விதிக்கப்படும். கிராஃப் ஃபூட் (உணவு), கிராஃப்மார்ட் (அங்காடிப் பொருள்கள்), கிராஃப் எக்ஸ்பிரஸ் (விநியோகச் சேவை) ஆகியவற்றின் கட்டணங்களில் மாற்றமில்லை.
இவ்வாண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்த இணையத் தள ஊழியர்கள் சட்டப்படி, 1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த இளையர்கள் அவர்களின் மசேநிதி சேமிப்பில் அதிகத் தொகையை செலுத்த வேண்டும். அவர்களை பணியமர்த்தும் இணையத்தள நிறுவனங்களும் அவர்களின் பங்கைச் செலுத்த வேண்டும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இணையத்தள ஊழியர்களின் சந்தா 2.5 விழுக்காடு ஆண்டுதோறும் உயரும். நிறுவனங்கள் ஊழியர்களுக்காகச் செலுத்தவேண்டிய சந்தா, ஆண்டுதோறும் 3.5விழுக்காடு உயர்த்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, மசேநிதி சந்தாவோடு மற்ற செயல்பாட்டு செலவுகளும் உயர்வதால், வாகனப் பயணக் கட்டணங்களும் “காலத்துக்கு ஏற்றபடி” மாற்றப்படும் என்று கிராஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பயணிகள் செலுத்தும் ஓட்டுநர்கள் கட்டணம், 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையில் 50 காசாகவே இருக்கும் என்று கிராஃப் கூறியது. அந்தக் கட்டணம் “சாலைகளில் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் இதர செலவுகளை” ஈடுகட்ட பயணிகளால் செலுத்தப்படுகிறது.
இதேபோன்ற 2025ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வுக்கான ஒரு முடிவை கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிராஃப் அறிவித்திருந்தது.
கோஜக், டடாஇ, ரையிட், கம்ஃபர்ட் டெல்குரோவின் சிடிஜி சிக் ஆகிய சேவைகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரங்களுக்காக தொடர்புகொண்டுள்ளது.

