தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளூர் வேளாண்மை, உற்பத்தியை ஊக்குவிக்க அழைப்பு

2 mins read
2af3baa0-013d-41af-9526-eb477930fa74
‘வடமேற்கு நீடித்த நிலைத்தன்மை விழா’ நிகழ்வில் தங்கள் மகள் ஷ்ரத்தாவுடன் பங்கேற்ற பாலகிருஷ்ணன்-சண்முகப்பிரியா தம்பதியர். - படம்: இளவரசி ஸ்டீஃபன்

சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவுசெய்ய, உள்ளூர் வேளாண்மையையும் உள்ளூர் உற்பத்திகளையும் ஆதரிப்பது மிக முக்கியம் என்று வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் வலியுறுத்தியுள்ளார்.

உணவு நீடித்த நிலைத்தன்மை, அது குறித்த விழிப்புணர்வை இலக்காகக் கொண்டு  நடைபெற்ற வடமேற்கு நீடித்த நிலைத்தன்மை விழா 2024 (The North West Sustainability Festival 2024) நிகழ்வின் நிறைவு நாளான நவம்பர் 10ஆம் தேதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் திரு அலெக்ஸ்.

விழாவில் உரையாற்றிய அவர், மீள்திறன் வாய்ந்த உணவு அமைப்பை சிங்கப்பூர் உருவாக்க இயலும் என்று கூறினார். அரசாங்கம் வகுத்துள்ளதன்படி 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவைகளில் 30 விழுக்காட்டினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் எனும் இலக்கைக் குறித்து தமது உரையின்போது குறிப்பிட்டார் திரு அலெக்ஸ்.

“இந்த லட்சிய இலக்குக்குக் கூட்டு நடவடிக்கை தேவை. உள்ளூர் வேளாண் துறையினரை ஆதரிப்பதன் மூலமும் உணவு வீணாவதைக் குறைப்பதன் வழியாகவும் நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த செயல்களைக் கடைப்பிடிப்பதன் தொடர்பிலும் உணவு நீடித்த நிலைத்தன்மை சார்ந்த குறிக்கோளை அடைய முடியும்,” என்றார் திரு அலெக்ஸ்.

சிங்கப்பூர் அதன் 90 விழுக்காட்டு உணவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைச் சுட்டிய மேயர், சமூகமாகச் செயல்படுத்த வேண்டிய பசுமைநலன் சார்ந்த முயற்சிகளையும் முன்வைத்தார். 

“குடியிருப்பாளர்கள் உணவு நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் தங்கள் பங்கினை ஆற்றிட முடியும். ஒவ்வொரு செயலும் பயனுள்ளது. சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்புமிக்க எதிர்காலத்தை உருவாக்க ஒன்றாக இணைந்து செயல்படுவோம்,” என்று கேட்டுக்கொண்டார் திரு அலெக்ஸ்.

சிறியோர் முதல் பெரியோரிடையே பொறுப்புமிக்க உணவுப் பழக்கங்களை வலியுறுத்தும் நோக்கோடு நடைபெற்ற இந்த விழாவில் கண்காட்சிகள், பயிலரங்குகள், சமையல் போட்டிகள் எனப் பல நடவடிக்கைகள் இடம்பெற்றன.  

விழா நவம்பர் 8ஆம் தேதி தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவைக் காண  திருமதி சண்முகப்பிரியா, 36, தம் குடும்பத்தினருடன் வந்திருந்தார். 

“வீட்டில் வேகவேகமாகச் சமைக்கும்போது நம்மையும் அறியாமல் சில நேரங்களில் காய்கறி, உணவை வீணாக்குகிறோம். அவ்வாறு விரயமாக்காமல் உணவை எவ்வாறு அளவோடு  சமைப்பது, பொறுப்பாகக் காய்கறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயனுள்ள தகவல்களை இந்த விழா அறிவுறுத்தியது,” என்றார் திருமதி சண்முகப்பிரியா. 

குறிப்புச் சொற்கள்