தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபேரர் பார்க் விளையாட்டு மைய நினைவுகளை அசைபோட வைத்த கொண்டாட்ட நிகழ்ச்சி

3 mins read
83fd3946-ecb1-4178-90fe-e955efcebf00
முன்னாள் விளையாட்டு வீரர்கள், பங்கேற்பாளர்களுடன் துணை அமைச்சர் ஆல்வின் டான். - படம்: லாவண்யா வீரராகவன்

கடந்த 1900களில் தொடங்கி பல ஆண்டுகளாக விளையாட்டுகளின் மையமாகத் திகழ்ந்த ஃபேரர் பார்க்கின் கடந்தகாலத் தொன்மை, நிகழ்கால முன்னெடுப்புகள், எதிர்காலத்தில் அங்கு அமையவுள்ள விளையாட்டு மையத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்துப் பகிர்ந்த ‘ஃபேரர் பார்க்கின் விளையாட்டு மரபுடைமைக் கொண்டாட்டம்’ பலரையும் ஒன்றிணைத்தது.

சனிக்கிழமை (ஜனவரி 4) நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில், அப்பகுதியின் விளையாட்டுப் பாரம்பரியத்தை நினைவுகூரும் சுவரோவியங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நீச்சல், காற்பந்து, குத்துச்சண்டை, டென்னிஸ் என பல விளையாட்டுகளை அங்கு பயிற்சி பெற்று, தேசிய அரங்கில் புகழ்பெற்ற சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

புகழ்பெற்ற காற்பந்து வீரரும் சிங்கப்பூர் தேசியக் காற்பந்து அணியின் முன்னாள் தலைவருமான டெரி பத்மநாதன், பாராலிம்பிக் நீச்சல் வீராங்கனை தெரெசா கோ உள்ளிட்ட ஆறு முன்னாள் வீரர்கள், அவ்விடத்துக்கும் தங்களுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்தனர்.

பசுமையான நினைவுகளைப் பகிர்ந்த விளையாட்டு வீரர்கள்.
பசுமையான நினைவுகளைப் பகிர்ந்த விளையாட்டு வீரர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

அவர்கள் பகிர்ந்த சிறு வயது பயிற்சி அனுபவங்களும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளும் பார்வையாளர்களின் மனத்தைத் தொட்டன. அவர்களுடன் சம காலங்களில் விளையாடிய, அப்பகுதியில் நீண்டகாலமாகக் குடியிருந்த பலரும் அக்கதைகளைப் புன்முறுவலுடன் ரசித்துக் கேட்டனர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை; வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், தாம் அங்கு காற்பந்து, டென்னிஸ் பயின்றதையும் நினைவுகூர்ந்தார்.

1840களில் ரேஸ் கோர்ஸ் மைதானமாகவும் பின்னர் சிங்கப்பூரின் முதல் விமான தரையிறங்கு தளமாக இவ்விடம் திகழ்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலகட்டத்தில் சிங்கப்பூரின் சுதந்திரத்திற்காக நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ குரல்கொடுத்த இடம், சிறப்புமிக்க விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இடம் உள்ளிட்ட பெருமைகள் இந்த இடத்துக்கு உண்டு,” என்றார் அவர்.

“அதனை மனதில் கொண்டு, அவற்றின் அடையாளங்களைச் சுமந்து நிற்கும் சுவரோவியங்கள் அமைந்துள்ளது சிறப்பு,” என்ற அவர், எதிர்காலத்திலும் சிறுவர்கள் இங்கு விளையாடுவார்கள் என்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஃபேரர் பார்க்கின் பாரம்பரியம் குறித்து விளக்கும் துணை அமைச்சர் டான்.
ஃபேரர் பார்க்கின் பாரம்பரியம் குறித்து விளக்கும் துணை அமைச்சர் டான். - படம்: லாவண்யா வீரராகவன்

“நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் அதிக நேரம் செலவிட்டது இங்குதான்”, என்று சொல்லிச் சிரித்த திரு டெரி, “விளையாட்டு எனக்கென்று ஒரு அடையாளத்தைத் தந்தது. எனக்கு ஒரு சிறப்பான வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. அதற்கான விதை விழுந்த இடம் இது,” என்றார்.

விளையாட்டு, ஒழுக்கத்தையும் சமூக ஒன்றிணைவு உள்ளிட்ட நன்மதிப்புகளையும் கற்றுத்தரும். குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“வளர்ச்சி அடைந்துள்ள சிங்கப்பூரில் இந்த இடம் வீடுகளாக மாறினாலும், இங்கு ஏற்பட்ட நினைவுகள் நீங்க மாட்டா. அதனைச் சிறப்பிக்கும் வண்ணம் இங்கு மையம் அமைவதில் பெருமை,” என்றார் திரு டெர்ரி.

“ஏறத்தாழ ஆறேழு வயது முதல் தம் சகோதரருடன் இங்கு வந்து விளையாடியது மனதில் பசுமையாக நினைவிருக்கிறது,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பகுதிக் குடியிருப்பாளர் முபாரக் அலி, 46.

நீச்சல் உள்ளிட்ட பல விளையாட்டுகளை அங்கு விளையாடியதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் சிறுவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறினார். தம்மைப் போன்றோருக்குப் பழைய, அழகான நினைவுகளை மீண்டும் இந்நிகழ்ச்சி அசைபோட வைத்ததாகச் சொன்னார்.

“கைப்பேசியில் மூழ்கிக் கிடைக்கும் சிறுவர்களுக்கு உடலையும் மனதையும் உறுதிப்படுத்தும் விளையாட்டுகளை அறிமுகம் செய்வது நம் கடமை. அதற்கான இடங்கள் அமைவதில் கூடுதல் உற்சாகம்,” என்று அவர் கூறினார்.

இவ்விடத்தின் பழைய நினைவுகளை மீட்டுருவாக்கும் வகையில் பாராலிம்பிக் நீச்சல் வீரர் தோ வெய் சூன் படைப்பில், ‘லைஃப் அட் ஃபேரர்’ எனும் 13 நிமிட ஆவணப்படம் இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

‘ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி’, மோல்மின்-கார்ன்ஹில் சமூக விளையாட்டுக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் ஆதரவுடன், மோல்மின்-கார்ன்ஹில் அடித்தள அமைப்புகள் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் குடுயிருப்பாளர்கள், மூத்தோர் திரளாகப் பங்கேற்றனர். அவர்களுக்கான உடற்பயிற்சி அமர்வுகளும் சில விளையாட்டு அங்கங்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்