தாயார் மற்றும் அவரது காதலனால் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சிறுமியின் சம்பவத்தில் முன்கூட்டியே தலையிடாததற்கு அமைச்சு விளக்கமளித்துள்ளது.
நான்கு வயது சிறுமியான மேகன் குங்கின் பராமரிப்பில் தொடர்புடைய சமூக சேவை அமைப்பு, சிறுமிக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தன்மையை முழுமையாக அதன் அறிக்கையில் விவரிக்கவில்லை என்று செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 8 ) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
சிறுமி மேகன், 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் உயிரிழந்தார். அவளை தாயார் ஃபூ லி பிங்கும், 29, அவரது அப்போதைய காதலன் வோங் ஷி ஸியாங்கும், 38, ஓராண்டுக்கு மேலாக பிரம்பால் அடித்தும் அறைந்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கடைசியாக காதலன் வோங் ஷி ஸியாங் முகத்தில் குத்தியதால் சிறுமி உயிரிழந்தார்.
அண்மையில் ஃபூவுக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வோங்குக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
2017ல் பியாண்ட் சோஷியல் சர்வீசஸ் (பிஎஸ்எஸ்) நடத்தும் பாலர் பள்ளியில் மேகன் சேர்க்கப்பட்டார்.
ஃபூவுக்கும் வோங்குக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் மேகனுடன் அந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஒன்றாக வசிக்கத் தொடங்கினர்.
2019 பிப்ரவரிக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே படுக்கை, சோஃபாவில் சிறுநீர் கழித்ததற்காக மேகனை இருவரும் பிரம்பால் அடித்தனர். இதனால் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.
2019 பிப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் பாலர் பள்ளிக்குச் சிறுமி வரவில்லை. அதே ஆண்டு மார்ச் முதல் அவர் மீண்டும் வரத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஃபூ, மகளை பாலர் பள்ளிக்கு அழைத்து வந்தபோது சிறுமியின் முகம், கை, கால்களில் காயம் இருப்பதைக் கண்ட ஊழியர் அது பற்றி காரணம் கேட்டபோது சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டதாக ஃபூ பொய் சொன்னார். இருப்பினும் அவை வோங் ஏற்படுத்திய காயங்கள். மேகனின் மற்ற சில காயங்கள் அவளை ஒழுங்குபடுத்துவதற்காக தான் அடித்ததால் ஏற்பட்டது என்று ஃபூ கூறினார்.
2019 செப்டம்பரில் ஃபூ தனது மகளை பாலர் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
அதன் பிறகு சிறுமிக்கு துன்புறுத்தல் அதிகரித்தது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிறுமி இறந்தார். சிறுமியின் உடலை தம்பதி எரித்துவிட்டனர். 2020 ஜூலை வரையில் சிறுமியின் மரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
சிஎன்ஏ கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மார்ச் 19ஆம் தேதி சிறுமியியின் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்தது.
சிறுமிக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் குறித்து அவள் படித்த பிஎஸ்எஸ் பாலர் பள்ளியின் சமூக சேவை ஊழியரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, 2019 ஏப்ரல் முற்பகுதியில் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
“அதில் மேகன் மகிழ்ச்சியாக தோற்றமளித்ததாகவும் மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் 2019 மார்ச் 19ஆம் தேதியிலிருந்து பாலர் பள்ளிக்குத் தொடர்ந்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது,” என அமைச்சு குறிப்பிட்டது.
மேகனுக்கு பிஎஸ்எஸ் தற்காலிக பராமரிப்புத் திட்டத்தை உருவாக்கியிருப்பதாகவும் அதன்படி சிறுமியை அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்ப தாயார் ஃபூ ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.
சிறுமியின் பாட்டி நம்பகமான பராமரிப்பாளராக இருப்பார் என்பதை சமூக சேவை அமைப்பு மதிப்பிட்ட பிறகு பிஎஸ்எஸ் பராமரிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது.
பாலர் பள்ளி அளித்த தகவலின் அடிப்படையில் பிள்ளைப் பாதுகாப்பு நிபுணத்துவ நிலையத்துக்கு சிறுமி துன்புறுத்தப்படுகிறார் என்பதற்கான சந்தேகம் எழ காரணமில்லை என்று அமைச்சு தெரிவித்தது.
இதனால் சம்பந்தப்பட்ட அமைப்புகள் போதுமான அளவு முன்கூட்டியே இவ்விவகாரத்தில் தலையிடவில்லை என்று அது மேலும் கூறியது.
அதன் பின்னர் சிறுமி பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். சிறுமி வேறு ஏதாவது பள்ளியில் சேர்க்கப்பட்டாரா என்று சமூக ஊழியர் தேடினார். மேகனின் இருப்பிடம் குறித்து கவலை ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று அந்த சமூக சேவை ஊழியருக்கு பிள்ளைப் பாதுகாப்பு நிபுணத்துவ நிலையம் அறிவுரை வழங்கியிருந்தது.

