பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் கெவின் செல்வம், 45, பணிப்பெண் பியாங் இங்கை டொனைத் தலைமுடியைப் பிடித்துத் தரையிலிருந்து தூக்கியதை நீதிமன்றத்தில் மே 27ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
மியன்மாரைச் சேர்ந்த அந்த 24 வயதுப் பணிப்பெண், முதலாளிகளால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதை அடுத்து, 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி உயிரிழந்தார்.
2015ல் வேலைக்குச் சேர்ந்தபோது 39 கிலோகிராமாக இருந்த அவரது உடல் எடை, மாண்டபோது 24 கிலோகிராமாக இருந்தது.
பணிப்பெண் மாண்ட வழக்கில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின், திருவாட்டி பியாங் மீது தாம் எரிச்சலுற்றதாக நீதிமன்றத்தில் கூறினார்.
2016 ஜூன் 24ஆம் தேதி, குடும்பத்தினர் நீச்சல் குளத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், பணிப்பெண் பியாங் உணவருந்தாமல் தூங்கிக்கொண்டிருந்ததாக செல்வம் கூறினார். அதனால் தலைமுடியைப் பிடித்துத் தான் தூக்கியதாக அவர் சொன்னார்.
பணிப்பெண் மாண்ட நாளில், தான் காலையில் வேலைக்குக் கிளம்பியபோது அவர் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் மூச்சுவிடுவதைக் காணமுடிந்ததாகவும் செல்வம் குறிப்பிட்டார்.
பணிப்பெண்ணின் கை சன்னல் கம்பியுடன் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்ததாகவும் அப்போதைய மனைவி காயத்ரி முருகையனிடம் கட்டை அவிழ்க்கும்படி கூறியதாகவும் செல்வம் கூறினார்.
அன்று பின்னேரம் காயத்ரி தன்னைத் தொலைபேசியில் அழைத்து திருவாட்டி பியாங் மாண்டுவிட்டதாகக் கூறியதாக செல்வம் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டுக்கு விரைந்தபோது காயத்ரியின் தாய் பிரேமா கண்காணிப்பு கேமராப் பதிவுகளை அழித்துவிடும்படித் தன்னிடம் கூறியதாக அவர் சொன்னார். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பே கண்காணிப்பு கேமராவை அகற்றிவிட்டதாக முன்பு அவர் கூறியிருந்தார்.
முதலாளிகள் பணிப்பெண்ணுக்குச் சூடு வைத்தது, கழுத்தை நெரித்தது, பலமாகக் குலுக்கியது, கையால் குத்தியது, உதைத்து மிதித்தது, பட்டினி போட்டது போன்ற கொடுஞ்செயல்கள் பின்னர் விசாரணையில் தெரியவந்தன.

