தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோல் விபத்தில் ஒருவர் பலி; இருவர் ரத்தத்தில் எட்டோமிடேட் கலப்பு

2 mins read
68b61cc0-2878-4768-bb47-5cb863b577ba
விபத்து கடந்த மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்தது. - படம்: ‌ஷின் மின்

கடந்த மே மாதம் பொங்கோல் ரோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

அவ்விபத்தில் சிக்கிய இருவரின் ரத்தத்தில் எட்டோமிடேட் மருந்து இருந்தது தெரியவந்துள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தெரிவித்தது.

மே 13ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் பொங்கோல் ரோட்டில் ஒரு கார், பேருந்துடன் மோதியது. அந்த காரில் சம்பந்தப்பட்ட இருவரும் இருந்தனர்.

அந்த காரில் 42 மின்சிகரெட்டுகளும் 1,200க்கும் அதிகமான போட் (pod) கருவிகளும் இருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் சிலவற்றில் எட்டோமிடேட் இருந்தது தாங்கள் நடத்திய சோதனையில் தெரியவந்ததாக சுகாதார அறிவியல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்தது.

விபத்துக்குப் பிறகு காரில் இருந்த 30 வயது ஆண் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். அவருடன் இருந்த 28 வயது மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மயக்கநிலையில் இருந்தார். அப்பெண் பிறகு உயிரிழந்தார்.

வலி தெரியாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எட்டோமிடேட்டை, மருத்துவ நடைமுறைகளில் உபயோகிக்க மட்டுமே அனுமதி உள்ளது. அதைப் பயன்படுத்த கடுமையான நிபந்தனைகள் இருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டது.

போதைப்பொருள் தடுப்புச்  சட்டத்தின்கிழ் வரும் பட்டியலில் எட்டோமிடேடடைச் சேர்க்க சுகாதார அமைச்சும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தெரிவித்தார். அதிகமான மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் சேர்க்கப்பட்டு வரும் வேளையில் அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

“மின்சிகரெட்டுகள் அல்லது பயனீட்டாளர்கள் நேரடியாகச் சுவாசிக்கும் வகையிலான எண்ணெய் மாத்திரைகள் (oil capsules) போன்றவற்றில் காணப்படும் எட்டோமிடேட் மருத்துவப் பொருளன்று; அது தடை செய்யப்பட்ட பொருளாகும்,” என்று சுகாதார அறிவியல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்