அப்பர் புக்கிட் தீமாவில் கடந்த ஆண்டு தம் 11 வயது இரட்டை மகன்களின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படும் தந்தை, நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இருக்கிறார்.
சேவியர் யாப் ஜுங் ஹவ்ன், 49, காணொளி இணைப்பு வழியாக நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரது வழக்கு விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் மே 26ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்.
2022 ஜனவரி 21ஆம் தேதி மாலை 4.25 மணிக்கும் 6.20 மணிக்கும் இடையில் கிரீன்ரிட்ஜ் கிரசென்ட் விளையாட்டுத் திடல் அருகே மூடப்பட்ட கால்வாய் ஒன்றில் ஆஸ்டன் யாப் காய் ஷெர்ன், ஈதன் யாப் ஈ செர்ன் எனும் தமது இரட்டை மகன்களைக் கொன்றதாக சேவியர் யாப் மீது ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இவ்வாண்டு பிப்ரவரியில் அந்த கொலைக் குற்றச்சாட்டு, நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டது. மனநலக் கழக அறிக்கையில் யாப்புக்கு மனநலப் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்ததை அடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.

