ஒன்பது மாதங்களே ஆன குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய 35 வயது ஆடவருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) விதிக்கப்பட்டது.
குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. குழந்தையைத் துன்புறுத்திய இரண்டு குற்றங்களை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
குற்றங்கள் நடந்தபோது அவரது முன்னாள் மனைவியுடனும் அந்த நேரத்தில் இரண்டு வயதான அவர்களின் மூத்த மகளுடனும் அவர் ஒரு அடுக்குமாடி வீட்டில் வாழ்ந்துவந்தார்.
2024ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி நடந்த முதல் சம்பவத்தில் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த தொட்டில் அருகே ஆடவர் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார். அன்றிரவு 8.45 மணியளவில் குழந்தை விழித்தெழுந்து அழத் தொடங்கியது.
அப்போது கைப்பேசியில் இருந்த ஒளிவிளக்கு விசையை இயக்கி அதன் வெளிச்சத்தைக் குழந்தையின் முகத்தில் ஆடவர் காட்டினார்.
அழுகையை நிறுத்தும்படி கூறி தொட்டிலில் இருந்த தலையணையை எடுத்து அவர் குழந்தையைத் தாக்கினார்.
இரண்டாவது சம்பவம் குழந்தை 13 மாதங்களை எட்டியபோது நிகழ்ந்தது. அதே ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி குழந்தையை அடித்ததோடு அதனைத் தொட்டிலில் இருந்த படுக்கையில் விழும்படி தூக்கி வீசினார்.
இவை அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. குழந்தையைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்தும்படி அவரது முன்னாள் மனைவி அவரிடம் பலமுறை கேட்டுக்கொண்டும் ஆடவர் கேட்க மறுத்தார்.
2024 டிசம்பர் மாதம் ஆடவர் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த அந்த மாது பிறகு 2025ல் அவரது கணவரிடம் இருந்து மணவிலக்குப் பெற்றார்.


