தமது 15 வயது மகளுக்குத் தெளிவான சமையல் குறிப்புகளை வழங்கினார் அந்த 46 வயது ஆடவர்.
அரிசியை இறுதியில்தான் சேர்க்க வேண்டும்’, ‘மிளகு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்’ போன்ற குறிப்புகளை அவர் வழங்கிக்கொண்டிருந்தார்.
ஆனால், இருவரும் சமையலறையில் அருகருகில் நின்றிருக்கவில்லை.
சாங்கி சிறைச்சாலையின் ஓர் அறையில் இருந்த தந்தை ஃபாய் (உண்மைப் பெயரன்று), பள்ளியிலிருந்த மகளுடன் காணொளி அழைப்பு வழியாக உரையாடினார்.
சிங்கப்பூர்ச் சிறைத்துறையும் கல்வி அமைச்சும் இணைந்து செயல்படுத்தும் ‘புரோஜெக்ட் ஹோப்’ திட்டத்தின்கீழ், சிறைத்தண்டனையை நிறைவேற்றும் பெற்றோர், பள்ளி செல்லும் தங்களின் பிள்ளைகளுடன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காணொளி அழைப்புமூலம் உரையாட முடிகிறது.
இத்திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது கைதிகள் 134 பேரும் 79 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 186 பேரும் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்து வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை பெற்ற சிலரின் பிள்ளைகளில் கிட்டத்தட்ட ஐவரில் ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெற்றோர் உடன் இல்லாத நிலையில் பதின்ம வயதினர் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறிய ஃபாய், இத்திட்டத்தின்மூலம் கைதிகள் தங்கள் பிள்ளைகளுக்குத் தார்மிக ஆதரவை வழங்க முடிகிறது என்றார். மேலும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் குற்றச் செயல்களில் தங்களின் பிள்ளைகள் ஈடுபடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்து பேணுவது பிள்ளைகளின் மனநலனுக்கு உதவுவதோடு, கைதிகளின் மறுவாழ்வுக்கும் உறுதுணையாக இருக்கும் எனச் சிறைத்துறை அதிகாரி யீ ஷுகின் தெரிவித்தார்.
