வர்த்தகரைத் தாக்கிய தந்தை, மகனுக்குச் சிறை

வர்த்தகரைத் தாக்கிய தந்தை, மகனுக்குச் சிறை

படம்: பிக்சாபே

11 Nov 2026 - 8:03 pm

2 mins read

முதலீட்டு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகச் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து மலேசியத் வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய ஆடவருக்கும் அவரது மகனுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டவர்களான 50 வயது காவ் யோங், அவரது 25 வயது மகன் காவ் ஸென்ஹான் ஆகிய இருவரும் 35 வயது மலேசிய வர்த்தகரைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று (நவம்பர் 11) அவர்களுக்கு 10 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இவ்விரு சீன நாட்டவர்களும் சிங்கப்பூரில் கடை ஒன்றைத் திறக்கத் திட்டமிட்டிருந்தனர். தங்களுக்கு வேலை அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்காக, அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரர் ஒருவருடன் தொடர்புகொண்டனர்.

அந்தச் சிங்கப்பூரர், சிங்கப்பூரில் தமது வர்த்தகத்துக்காக முதலீட்டாளர்களைத் தேடிக்கொண்டிருந்த மலேசிய வர்த்தகரை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

தந்தை, மகன் இருவரும் தங்கள் குடும்பக் காரை விற்றும் வங்கிக் கடன் பெற்றும் அந்த வணிகத்தில் குறைந்தது $18,000 முதலீடு செய்தனர்.

ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கான வேலை அனுமதிச் சீட்டுகளைப் பெற முடியவில்லை என்று வர்த்தகர் அவர்களிடம் கூறினார். அத்துடன், அவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவும் அவர் தவறிவிட்டார்.

இதையடுத்து, அத்தொழிலதிபரை நேரில் எதிர்கொண்டு நியாயம் கேட்பதற்காகத் தந்தை, மகன் இருவரும் அக்டோபர் 14ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கு வந்தனர்.

விவோசிட்டி கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த உணவங்காடியில் வர்த்தகரைக் கண்டனர். அவர்கள் அவரை நெருங்கியதும், அவர் கடையை விட்டு வெளியேறி அருகில் நிறுத்தப்பட்டிருந்த தமது காரை நோக்கிச் சென்றார். அவரைத் துரத்திச் சென்ற காவ் யோங், அவரது தலையில் ஓங்கி அடித்துக் காரினுள் தள்ளினார். வர்த்தகர் தப்பி ஓடுவதைத் தடுக்கும் வகையில் அவரது மகன் காரின் இருக்கை மீது அவரை அழுத்திப் பிடித்தார்.

காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் தந்தை, மகன் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். வர்த்தகருக்கு முகம், கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
தாக்குதல்காயம்சிறை