சிங்கப்பூரில் வடக்குப் பகுதியிலுள்ள ஆழமான வடிகால் ஒன்றில் கடமான் குட்டி மீட்கப்பட்டு, இரண்டு நாள்களுக்குப் பிறகு அதன் கூட்டத்துடன் மீண்டும் சேர்க்கப்பட்டது.
ஏக்கர்ஸ் வனவிலங்கு மீட்புக் அமைப்பினர் ஒருவரால் ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை வடிகாலில் குட்டிக் கடமான் கண்டெடுக்கப்பட்டது.
மான்குட்டிக்கு ஒரு வார வயதுதான் இருக்கும் என்று ஏக்கர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் பாலகிருஷ்ணன் கூறினார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, அந்த மான் எங்கே கண்டெடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க ஏக்கர்ஸ் மறுத்துள்ளது.
வடிகாலிலிருந்து மீட்கப்பட்ட குட்டிக் கடமான், மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டதுடன் உணவும் வழங்கப்பட்டதாக திரு கலைவாணன் தெரிவித்தார்.
கடமான்கள் மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்பதால், குட்டியைக் குடும்பத்துடன் மீண்டும் சேர்ப்பது மிக முக்கியம் என்றார் அவர்.
குட்டிக் கடமானை அதன் குடும்பம் இருந்த இடத்துக்கு ஏக்கர்ஸ் கொண்டுசென்று, அதன் தாயுடன் மீண்டும் சேர்த்ததாக திரு கலைவாணன் கூறினார்.
ஏக்கர்ஸ் அமைப்பு ஒரு கடமானை மீட்டு, மீண்டும் காட்டுக்குள் விடுவித்தது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில், ஏறக்குறைய 15 கடமான்கள் காடுகளில் வாழ்வதாக தேசியப் பூங்காக் கழகம் 2021ல் நடத்திய ஓர் ஆய்வில் கண்டுபிடித்தது.
கடமான் கூட்டங்கள் மேக்ரிட்சி, புக்கிட் தீமா உள்ளிட்ட மத்திய நீர்ப்பிடிப்பு வனப் பகுதியிலுள்ள சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.