தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நல்லிணக்கத்தைக் கொண்டாடிய விருந்து நிகழ்ச்சி

3 mins read
bdf6054b-16e4-4703-beb0-e3407a6608b4
விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் டோங் உரையாற்றினார். - படம்: அப்துல் அலீம் சித்தீக்கி பள்ளிவாசல்
multi-img1 of 2

இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அப்துல் அலீம் சித்தீக்கி பள்ளிவாசலும் ஜூ சியாட் நல்லிணக்க வட்டமும் இணைந்து தங்களது வருடாந்தர நல்லிணக்க மதிய விருந்து நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) ஏற்பாடு செய்திருந்தன.

விருந்து நிகழ்ச்சியில் 170க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், அடித்தள ஆலோசகர்கள், சமயப் பிரதிநிதிகள், சமூகப் பங்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்னணியைச் சேர்ந்த விருந்தினர்கள் ஒன்றுகூடிச் சிங்கப்பூரின் பல இன, பல சமய அடையாளத்தைக் கொண்டாடினர்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்ட அமைச்சர் எட்வின் டோங், மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், திருவாட்டி ஜெசிக்கா டான், திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையின் முக்கிய உதாரணமாக இந்த விருந்து நிகழ்ச்சி திகழ்வதாக அமைச்சர் டோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் டோங் உரையாற்றினார்.
விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் டோங் உரையாற்றினார். - படம்: அப்துல் அலீம் சித்தீக்கி பள்ளிவாசல்

“இந்த அறையைச் சுற்றிப் பாருங்கள். நாம் வெவ்வேறு இனங்கள், பின்னணிகள், சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே மேசையில், தோளோடு தோள் சேர்ந்து அமர்ந்திருக்கிறோம். இதுவே சிங்கப்பூரின் சிறப்பும் வலிமையும்,” என அவர் கூறினார்.

மேலும், “இந்த ஒற்றுமையை நாம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உலகம் முழுவதும் வெறுப்புச் சொற்கள், தவறான தகவல்கள், அதிகாரத்தை நாடுவோரின் செயல்கள் முதலியவற்றால் சமுதாயங்களில் பிளவுகள் எளிதாக ஏற்படுகின்றன. ஒருமுறை அந்த ஒற்றுமை சிதைந்துவிட்டால், அதை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம்,” என்றார் அவர்.

பள்ளிவாசலின் 70வது ஆண்டு விழாவையொட்டி உருவாக்கப்பட்டிருந்த நினைவு நூலைத் திரு எட்வின் டோங் அதிகாரபூர்வமாக நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த நூல், சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் ஓர் எளிய வழிபாட்டு இடமாகத் துவங்கி, இன்றைக்கு சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமையின் மையமாக வளர்ந்துள்ள அப்துல் அலீம் சித்தீக்கி பள்ளிவாசலின் பயணத்தைச் சித்திரிக்கிறது.

பள்ளிவாசலின் 70வது ஆண்டு விழாவிற்காக திரு டோங் தனது வாழ்த்துகளை எழுத்து மூலம் தெரிவித்தார்.
பள்ளிவாசலின் 70வது ஆண்டு விழாவிற்காக திரு டோங் தனது வாழ்த்துகளை எழுத்து மூலம் தெரிவித்தார். - படம்: அப்துல் அலீம் சித்தீக்கி பள்ளிவாசல்

பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி மோயிஸ் டைபாலி, விருந்தினர்களுக்கு வாழ்த்துரையாற்றி, பள்ளிவாசலின் நிறுவனரான மௌலானா அப்துல் அலீம் சித்தீக்கியைத் தமது உரையில் நினைவுகூர்ந்தார்.

“அவர் கூறிய வார்த்தைகள் எளிமையானவை, ஆனால் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘நாம் வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், நாம் பிரிக்கப்படவில்லை.’ இன்று, பல்வேறு இன, சமய, வாழ்க்கை முறைகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் அந்தக் கூற்றை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறோம்,” என்றார் அவர்.

ஆரம்ப ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிவாசலின் மேலாளர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

இவ்வாண்டின் விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 170 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டின் விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 170 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். - படம்: படம்: அப்துல் அலீம் சித்தீக்கி பள்ளிவாசலின்

“முதல் விருந்து நிகழ்ச்சி சிறிய அளவில், ஏறத்தாழ 40 பேருடன் தொடங்கப்பட்டது. அண்மைய ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 170 பேர் வருகை தந்துள்ளனர்.

“ஆனால், இடப் பற்றாக்குறையால், 100 பேருக்கே உள்ளே இருக்கைகளை வழங்க முடிந்தது. மீதமுள்ள 70 பேர் வெளியில் உணவருந்தினார்கள்,” என்று அவர் கூறினார்.

இடப் பற்றாக்குறை இருந்தாலும், இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் பள்ளிவாசலில்தான் நடத்த வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“இன, சமய ஒற்றுமை என்பது சிங்கப்பூரின் மரபணுவில் இருக்கிறது என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் எடுத்துகாட்டுகின்றன. இது உள்ளூரில் மட்டுமல்லாது, உலகளாவிய அளவிலும் சிங்கப்பூரின் வலிமையான அடையாளத்தை வெளிகாட்டுகிறது,” என்று பள்ளிவாசலின் நீண்டகால ஆதரவாளர் ராஜ் முகமது கூறினார்.

குறிப்புச் சொற்கள்