பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கடலோரக் காவல் படையின் பிரானி வட்டாரத் தளத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதை துணை காவல்துறை அதிகாரி ஒருவர் கண்டார். ஆனால் அவர் அதை நீர்க் கசிவு என்று நினைத்தார்.
அந்தச் சம்பவத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி சிங்கப்பூரின் தெற்குக் கடற்பகுதியில் ஏறக்குறைய 23 டன் டீசல் எண்ணெய் கசிந்தது.
அன்று படைத் தளத்தில் பணியிலிருந்த அதிகாரி சேதமடைந்த குழாயிலிருந்து தண்ணீர் கசிவதாக காலை 11.57 மணிக்குத் தெரிவித்ததாக உள்துறை துணை அமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிசிடிவி கேமரா காட்சிகள், விசாரணைகள் மூலம் கசிவுக்குக் குழாய்தான் காரணம் எனத் தெரியவந்தது.
எரிபொருள், தண்ணீர் ஆகியவற்றுக்கான இரு குழாய்களும் ஒரே இடத்தில் இருப்பதாகவும் எண்ணெய்க் கசிவை அடையாளம் காண அந்த அதிகாரி பயிற்சி பெற்றிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கடல் துறையில் பயன்படுத்தப்படும் டீசல் தெளிவான திரவமாக இருக்கும். எனவே அது தண்ணீர் என்று அவர் நினைத்தார்,” என்று இணைப் பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.
பிரானி வட்டாரத் தளத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணை நடத்தப்படுமா என்று ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் எழுப்பிய கேள்விக்கு திரு பைஷல் பதிலளித்தார்.
பிப்ரவரி 5ஆம் தேதி சம்பவத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 6 அன்று பிரானி வட்டாரத் தளத்தின் அனைத்து எரிபொருள் குழாய்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. லோயாங், லிம் சூ காங், கல் (Gul) ஆகிய இடங்களில் உள்ள கடலோரக் காவல் படையின் மற்றத் தளங்களிலும் பிப்ரவரி 8 அன்று சோதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டில் இதேபோன்ற பல எண்ணெய்க் கசிவு சம்பங்கள் இடம்பெற்றன.

