ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் கட்டணக் கழிவு

ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் கட்டணக் கழிவு

2 mins read
7403847e-a7ce-4346-96e8-93f1ceaf962b
ஒட்டுமொத்தமாக, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்துக்கு, தகுதியுடைய ஒவ்வொரு குடும்பமும் மொத்தம் $570 வரை தண்ணீர், மின்சாரக் கட்டணத் தள்ளுபடியையும் 3.5 மாதங்கள் வரையிலான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் பெறவுள்ளன. - படம்: சாவ்பாவ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள், ஜூலை மாதத்தில் அவற்றின் தண்ணீர், மின்சாரக் கட்டணம் மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணங்களுக்கான தள்ளுபடிகளைப் பெறவுள்ளன.

வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தள்ளுபடிகளை வழங்குகிறது. இது குறித்து நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில், தகுதியுள்ள குடும்பங்கள் அவற்றின் தண்ணீர், மின்சாரக் கட்டணத்தில் $190 வரை ‘யுசேவ்’ தள்ளுபடியாகப் பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளது.

இது வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடித் தொகையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். அத்துடன் சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் ஒரு மாதம் வரையிலான தள்ளுபடியும் அவர்களுக்குக் கிடைக்கும்.

வீட்டின் வகையைப் பொறுத்து இந்தத் தள்ளுபடித் தொகை மாறுபடும். உதாரணத்துக்கு நான்கறை வீடுகளில் வசிப்பவர்கள் $150 மதிப்புள்ள ‘யுசேவ்’ தள்ளுபடியும் அரை மாத சேவை, பராமரிப்பு கட்டணத் தள்ளுபடியும் பெறுவர்.

அதே வேளையில், ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிப்பவர்கள் அதிகபட்சமாக $190 மதிப்புள்ள 'யுசேவ்’ தள்ளுபடியையும் ஒரு மாத சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் பெறுவர்.

ஒட்டுமொத்தமாக, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்துக்கு, தகுதியுடைய ஒவ்வொரு குடும்பமும் மொத்தம் $570 வரை தண்ணீர், மின்சாரக் கட்டணத் தள்ளுபடியையும் 3.5 மாதங்கள் வரையிலான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் பெறவுள்ளன.

இந்தத் தள்ளுபடித் தொகைகள் தகுதியுள்ள குடும்பங்களின் ‘எஸ்பி சர்வீசஸ்’ மற்றும் அந்தந்த நகர மன்றக் கணக்குகளில் தானாகவே சேர்க்கப்படும். அதிகரிக்கப்பட்ட பொருள், சேவை வரி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ள மக்களுக்கு உதவும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியன்று 2026 வரவுசெலவுத் திட்ட உரையின் போது, பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தக் கூடுதல் ‘யுசேவ்’ தள்ளுபடிகளை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
யு-சேவ்கட்டணம்வீவக