மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் தாங்கள் மோசடி செய்யப்படுவதை நம்பாமல் இருப்பதைத் தடுக்க அவர்கள் பணப் பரிவர்த்தனை செய்வதை தற்காலிகமாகத் தடுக்கும் புதிய மசோதா குறித்து அரசு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறது.
வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு மோசடிக்கு உள்ளாகிவிடுமோ என்று சந்தேகப்படும்போது அவர்கள் ‘கில்சுவிட்ச்’ என்ற பாதுகாப்பு செயலியைப் பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கலாம். மோசடிகளில் அகப்படாமல் இருக்க இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருப்பினும் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து பணத்தைப் பறிகொடுத்து சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் இன்னமும் அதிகமாகவே இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில், இவ்வாண்டு முதல் பாதியில் நடைபெற்ற மோசடிகளில் 86 விழுக்காடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் தாங்களாகவே முன்வந்து பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை.
மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் மனத்தை மாற்றி அவர்கள் தாங்களாகவே பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளனர் என்று அமைச்சு கூறுகிறது.
“இவற்றில் சில சம்பவங்களில் காவல்துறை, வங்கிகள் அல்லது குடும்பத்தார் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் மோசடியில் சிக்கியுள்ளனர் என்று எச்சரித்துள்ளனர். அப்படியிருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நம்ப மறுத்தனர்,” என்று அமைச்சு விளக்கியது.
“இவற்றில் இணையக் காதல் மோசடி, அரசு அதிகாரிகள்போல் நம்பவைத்து ஏமாற்றுவது ஆகியவை அடங்கும். தற்போதைய நிலையில், இதுபோல் பாதிக்கப்படுவர்கள் தாங்கள் மோசடிக்காரர்களிடம் பணத்தை வலுக்கட்டாயமாக இழப்பதைத் தடுக்க காவல்துறையினருக்கு எந்த அதிகாரமும் இல்லை,” என்று அமைச்சு கூறியது.
இதன் தொடர்பில், மோசடிச் சம்பவங்களிலிருந்து பாதுகாக்க மசோதா ஒன்றை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30ஆம் தேதி) தான் தாக்கல் செய்யவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மசோதா குறித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்கள் கருத்தை அறிய அரசு விழைகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மசோதா மூலம் காவல்துறையினர், ஒருவர் மோசடிக்கார்களிடம் பணத்தை இழக்கக்கூடும் என்று நம்பினால், அவர்கள் அந்த வாடிக்கையாளரின் வங்கிப் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு உத்தரவிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

