‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியாச் செய்திகள்’ - நிரந்தரக் கண்காட்சி

சிங்கப்பூரின் 60 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றை உணர ஒரு வாய்ப்பு

2 mins read
f82a9569-931d-4d7f-985b-4eba0b653bf0
’ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியாச் செய்திகள்’ நிரந்தரக் கண்காட்சியில் மலேசியா-சிங்கப்பூர் பிரிவினைப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களான காலஞ்சென்ற திரு லீ குவான் யூ, திரு கோ கெங் சுவீ, திரு எஸ் ராஜரத்தினம் உள்ளிட்டோரின் உரையாடல்கள் உட்பட இதுவரை கேட்டிராத பல அரிய தகவல்களைப் பொதுமக்கள் முதன்முறையாகத் தெரிந்துகொள்ளவிருக்கின்றனர். - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 2

சிங்கப்பூரின் 60 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றை நினைவுகூரும் வகையிலும் மக்களுக்கு அதை உணர்த்திடும் இலக்குடனும் களம்காணவுள்ளது ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியாச் செய்திகள்’ (The Albatross File: Singapore’s Independence Declassified) நிரந்தரக் கண்காட்சி.

மலேசியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாகச் சிங்கப்பூர் மாறியதன் பின்னணி, பிரிவினைக்கு முன்பு நடைபெற்ற தலைவர்களின் இறுதிக்கட்ட உரையாடல்கள், கையெழுத்தான ஒப்பந்தங்கள், அரங்கேறிய உணர்வுபூர்வ விவாதங்கள் எனப் பல்வேறு தகவல்கள் ஒருங்கிணைந்த வரலாற்றுப் பேழையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தக் கண்காட்சி.

தேசிய நூலக வாரியமும் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் இணைந்து வழங்கும் இந்தக் கண்காட்சியில் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965 வரை நடந்தேறிய முக்கிய அரசியல் நிகழ்வுகள், குறிப்பாகஅமைச்சரவையின் ரகசியக் குறிப்புகள், பிரிவினை தொடர்பில் மலேசியத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தொடர்பில் திரு கோ கைப்பட எழுதிய குறிப்புகள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மலேசியா-சிங்கப்பூர் பிரிவினைப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களான காலஞ்சென்ற திரு லீ குவான் யூ, திரு கோ கெங் சுவீ, திரு எஸ் ராஜரத்தினம் உள்ளிட்டோரின் உரையாடல்கள், வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் ஆகியவற்றுடன் இதுவரை வெளியிடப்படாத பல கலைப்பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்காக முதன்முறையாக வைக்கப்படவுள்ளன.

இந்தப் புதிய நிரந்தரக் கண்காட்சி, டிசம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கண்காட்சியில் சிங்கப்பூரின் உருமாற்றத்திற்கு வித்திட்ட முக்கிய வரலாற்று நிகழ்வுகள், காலச் சுவடுகள், அரங்கம், ஆவணம், ஒலிக்கூடங்கள், செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளம் (Chatbook) எனப் பல்வேறு அம்சங்கள் தனித்துவமிக்க வடிவங்களில் இடம்பெற்றுள்ளன.

‘எஸ்ஜி60’ ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில், நாட்டின் சுதந்திரப் பயணத்தில் கடந்து வந்த பாதைகளை நினைவுகூர்வது அவசியம் என்று தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி மெலிசா மே டாம் கூறினார்.

கண்காட்சி குறித்துக் கருத்துரைத்த அவர், ‘‘தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பல முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள், வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் எனப் பல வளங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.

“பிரிவினை தொடர்பில் முன்னோடித் தலைவர்கள் பகிர்ந்த கருத்துகள், முன்வைத்த வாதங்கள், அவர்களின் குரல்களை இந்தக் காட்சிக்கூடங்கள் வழியாகக் கேட்கும்போது மனம் நெகிழ்கிறது. உணர்வுபூர்வமான அத்தருணங்களை, வரலாற்றுச் சுவடுகளை மக்கள் ஆழமாக உணர்ந்திட இது உதவும்’’ என்றார் அவர்.

விரைவில் வெளியீடு காணவிருக்கும் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூலினை அடிப்படையாகக் கொண்டதும், ‘எஸ்ஜி60’ கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறவிருப்பதுமான இந்தக் கண்காட்சி, சிங்கப்பூரின் சுதந்திரப் பயணத்தை மேலும் விரிவாக அறிந்திட வகைசெய்யும்.

இந்த நிரந்தரக் கண்காட்சிக்கான அனுமதி இலவசம். இதற்கான நுழைவுச்சீட்டுகள் பதிவுக்கு https://thealbatrossfile.nlb.gov.sg இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்