சிங்கப்பூரின் கருவள விகிதம் 0.87ஆகச் சரிந்தது

இதுவரை இல்லாத நிலைக்கு இறங்கியது

சிங்கப்பூரின் கருவள விகிதம் 0.87ஆகச் சரிந்தது

2 mins read
38f701a3-b8c7-424a-bd3f-000e53074e75
சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதம் 2025ஆம் ஆண்டில் 0.87 என்ற அளவிற்குச் சரிவுகண்டது. - கோப்புப் படம்: யுனிசெஃப்
multi-img1 of 2

சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதம் 2025ஆம் ஆண்டில் 0.87 என்ற அளவிற்குச் சரிவுகண்டது.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இதனைத் தெரிவித்தார்

பிரதமர் அலுவலக அமைச்சும், நிதி அமைச்சும் ‘முன்னோக்கிய அரசாங்கம், நம்பிக்கைமிக்க சிங்கப்பூர்’ எனும் கருப்பொருளில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதித்தன.

நாட்டின் மக்கள்தொகை சந்தித்துவரும் சவால்கள், அவற்றைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் ஆகியவை துணைப் பிரதமரின் உரையில் முக்கிய அங்கம் வகித்தன.

நிகழ்காலச் சவால் 

“நாடு இதுவரை கண்டிராத வகையில் கருவள விகிதம் சரிந்துவிட்டது. 2024ஆம் ஆண்டு காணப்பட்ட விகிதம் 0.97. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த 1.24 என்ற அளவுகளுடன் ஒப்பிடுகையில் இது கடுமையான சரிவு.

‘‘முன்பு எப்போதும் இல்லாத வகையில் நமது மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. கடந்த ஆண்டு, ஐந்து குடிமக்களில் ஒருவர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தார். 2015ஆம்  ஆண்டு இந்த எண்ணிக்கை 8 பேருக்கு ஒருவர் என்று இருந்தது,’’ என்று கூறிய திரு கான், இது தற்போது நிலவும் நிகழ்காலச் சவால் எனக் குறிப்பிட்டார்.

குறைந்துவரும் பிறப்பு விகிதமும் மூப்படையும் மக்கள்தொகையும் எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டையும், சமூகத்தையும், பொருளியலையும் பெரிதும் மாற்றியமைக்கும் என்று அவர் சொன்னார்.

கைகொடுக்காத குடியேற்றம்

சிங்கப்பூரில் புதியவர்களின் வரவால் குடியேற்றம் இருந்தபோதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியை அது பெரிதும் வலுப்படுத்தவில்லை என்பதை  துணைப் பிரதமர் கானின் உரை சுட்டியது.

குடியேற்றம் இருந்தபோதும் கடந்த பத்து ஆண்டுகளில் பார்க்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி மெதுவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2015-2020 ஆண்டுகளுக்கிடையேயான காலப்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 0.9 விழுக்காடாக இருந்து.  2020-2025 காலகட்டத்தில் அது ஆண்டுக்கு 0.8 விழுக்காடாகக் குறைந்தது. 

“மக்கள்தொகை கடந்த ஆண்டு 0.7% மட்டுமே  வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2040களின் தொடக்கத்தில் குடிமக்களின் எண்ணிக்கை நலிவுறத் தொடங்கும்,’’ என்றார் அவர்.

அவ்வகையில், குடும்பங்களை உருவாக்க சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதே முதலாவது மற்றும் முதன்மையான முன்னுரிமை என்று கூறிய திரு கான், திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவை தொடர்பில் சிங்கப்பூரர்களுக்கு வழங்கும் ஆதரவை மேலும் வலுப்படுத்த இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் உறுதிகூறினார்.

மேலும், சிங்கப்பூரர்கள் திருமணம், பிள்ளைப்பேறு தொடர்பில் வழங்கப்படும் உதவிகள் சார்ந்த முயற்சிகளை இரட்டிப்பாக்கினாலும், குறைந்த பிறப்பு விகிதத்தை ஈடுகட்ட குடியேற்றம் சார்ந்த அம்சங்களும் கவனமாக நிர்வகிக்கப்படும் என்று துணைப் பிரதமர் மேலும் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்