கரிம வரி உயர்வு 37 விழுக்காட்டு நிறுவனங்களிடம் குறைந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை எரிசக்திச் சங்கம் (Seas) நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரியில் கரிம வரி உயர்த்தப்பட்டது. அந்த உயர்வால் தங்களது நீண்டகால நீடித்த நிலைத்தன்மை உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்ததாக 24.5 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்தன.
கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் எரிசக்திச் செயல்திறன் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதையும் முடுக்கிவிட்டுள்ளதாக ஏறக்குறைய 20 விழுக்காட்டு நிறுவனங்கள் கூறின.
எனினும், 3.6 விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கின. கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கச் செய்வதற்கு கரிம வரி உயர்வு மட்டுமே போதுமானதாக இராது என்று அவை குறிப்பிட்டன.
பெரும்பாலும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 250 துறைசார் வல்லுநர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து ஒரு டன் கரியமிலவாயு வெளியேற்றத்திற்கான கரிம வரியானது ஐந்து வெள்ளியிலிருந்து 25 வெள்ளியாக உயர்த்தப்பட்டது. 2026, 2027ல் அது டன்னுக்கு 45 வெள்ளியாகவும் 2030வாக்கில் 50 முதல் 80 வெள்ளி வரையிலும் உயர்த்தப்படும்.
முன்னதாக, புவி வெப்பமயமாதலுக்குத் தீர்வுகாண்பதற்கு ஏதுவாக, பருவநிலை சார்ந்த நடவடிக்கைகளை முடுக்கிவிட கரிம வரியை இன்னும் உயர்த்த வேண்டியுள்ளது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்திருந்தார்.
ஒட்டுமொத்தத்தில், ஆய்வில் பங்கேற்றோரில் 24.5 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூரின் கரிம வரி விகிதமானது செயல்திறனுடன் இருப்பதாகக் குறிப்பிட்டனர். அந்நடைமுறை மிதமான செயல்திறனைக் கொண்டுள்ளதாக 41.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆறு விழுக்காட்டினர் மட்டுமே கரிம வரி விகிதம் செயல்திறன்மிக்கதாக இருக்க வேண்டும் எனக் கூறினர். அந்த நடைமுறை பலனளிப்பதாகக் குறிப்பிட்ட அந்நிறுவனங்கள், அதன் செயல்திறனை மேம்படுத்த அதனை இன்னும் மெருகூட்ட வேண்டியுள்ளது என்றும் அதன் தாக்கம் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக ‘சீஸ்’ சங்கம் விளக்கியது.

