கார் பந்தய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இவ்வாண்டின் சிங்கப்பூர் ஃபார்முலா ஒன் கார் பந்தயம், செப்டம்பர் 22ஆம் தேதி பிரம்மாண்ட இறுதிச் சுற்றைக் காணவுள்ளது.
வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதியன்று, அந்தக் கார் பந்தயப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விறுவிறுப்பாகத் தொடங்கியது.
முதல் நாள் போட்டியைக் காணவந்த மக்கள் கனமழையில் நனைந்தாலும் தங்கள் மனங்கவர்ந்த ஓட்டுநர்களைக் கண்ட களிப்புடன் இல்லம் திரும்பினர்.
வெள்ளிக்கிழமை நடந்த முதல் இரண்டு பயிற்சிப் பந்தயங்களின் முடிவில், ஒரு நிமிடம் 30.727 நொடிகளில் ஆக விரைவில் ஒரு சுற்றை முடித்து பட்டியலில் முன்னிலை வகித்தார் மெக்லேரன் குழுவின் லேண்டோ நோரிஸ்.
அவருக்கும் இரண்டாம் நிலையில் வந்த சார்ல்ஸ் லெக்லெர்க்கிற்கும் இடையே வெறும் 0.058 நொடிதான் வித்தியாசம். மூன்றாம் நிலையில் வந்தார் சென்ற ஆண்டின் வெற்றியாளர் கார்லோஸ் செய்ன்ஸ்.
சென்ற ஆண்டு இறுதிச் சுற்றில் சுவரில் மோதிய மெர்சிடிஸ் ஓட்டுநர் ஜார்ஜ் ரசல் இவ்வாண்டும் இரண்டாம் பயிற்சிப் பந்தயத்தின் இறுதி நேரத்தில் சுவரில் மோதினார். ஆனால் சேதம் குறைவுதான். அவர் ஏழாம் நிலையைப் பிடித்தார்.
சனிக்கிழமை செப்டம்பர் 21ஆம் தேதி நடந்த மூன்றாம் பயிற்சிப் பந்தயத்தில் தன்னையே மிஞ்சினார் நோரிஸ். அவர் ஒரு நிமிடம் 29.646 நொடிகளில் ஆக விரைவில் ஒரு சுற்றை முடித்து முதலிடம் பிடித்தார். இரண்டாம் நிலையில் ஜார்ஜ் ரசலும் மூன்றாம் நிலையில் ஆஸ்கார் பியாஸ்ட்ரியும் வந்தனர்.
2024 பருவத்தின் ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ள மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் நான்காம் நிலையில் முடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் பார்வை
தோக்கியோவிலிருந்து தொழில் நிமித்தமாக சிங்கப்பூருக்கு வந்துள்ள ஆதித்யா, வெள்ளி, சனி இரு நாள்களும் கார் பந்தயத்தைக் கண்டார். ஒரு நாளுக்கு 300 வெள்ளி நுழைவுச்சீட்டை வாங்கியிருந்தார்.
“தோக்கியோவில் எஃப்1 பகலில் நடைபெறுகிறது. பந்தயத் தடமும் தோக்கியோ நகர்ப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. லாஸ் வேகஸ் போல, சிங்கப்பூர் எஃப்1 இரவில் நடைபெறுவதால் இது ஓர் அரிய அனுபவம். இங்கு வர போக்குவரத்தும் எளிதாக உள்ளது,” என்றார் ஆதித்யா.
நான்காவது ஆண்டாக எஃப்1 காண வந்திருந்த 19 வயது பார்கவ் ரமேஷ், 128 வெள்ளி நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருந்தார்.
“என் தந்தை ஃபெராரி சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதனால் எனக்கும் எஃப்1 பிடிக்கும். ஓட்டுநர்களைச் சந்தித்துப் புதிய விஷயங்களைக் கற்கிறேன். எதிர்காலத்தில் இத்துறையில் பொறியாளராகப் பணிபுரிய விரும்புகிறேன்,” என்றார் அவர்.

