பொதுவாக நடப்பில் இருக்கும் போதைப்பொருள் தடுப்புச் சட்டங்களையும் போதைப்பொருள்களை அடையாளம் காணும் முறைகளையும் வெற்றிகரமாகக் கடக்கக்கூடிய புதியவகை போதைப்பொருள்கள் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்படுகின்றன.
இதைக் கையாள உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்) புதிய தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வுக்கூடம், புதிய வகை போதைப்பொருள்களை அடையாளம் காண உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவும்.
ஃபர்ஸ்ட் லேப் (First Lab) என்றழைக்கப்படும் உத்திபூர்வ உருமாற்றத்துக்கான தடயவியல் புத்தாக்க, ஆய்வுக்கூடம் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தொடங்கப்பட்டது. புதிய ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம் உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
‘நியூ சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்சஸ்’ (என்பிஎஸ்) எனப்படும் புதியவகை போதைப்பொருள்களுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் ஃபர்ஸ்ட் லேப் ஆய்வுக்கூடம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எச்டிஎக்ஸ் அறிக்கை மூலம் தெரிவித்தது.
அத்தகைய புதியவகை போதைப்பொருள்கள், கஞ்சா, போதைமிகு அபின், ஹெராயின் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் வகைகளைப் போலவே இயங்கக்கூடியவை. அவற்றின் வேதிப்பொருள் கலப்பு மட்டும் மாறுபட்டிருக்கும்.
தற்போது சந்தையில் 566 வகை என்பிஎஸ் போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் அந்தப் புள்ளிவிவர அறிக்கையில் இடம்பெற்றுள்ள அந்தப் புதிய வகை என்பிஎஸ் போதைப்பொருள் வகைகளில் 44, புதிதாக அடையாளம் காணப்பட்டவை.
அதிக வருமானம் கொண்ட நாடுகள் பலவற்றில் ‘நிட்டஸீன்ஸ்’ (nitazenes) எனப்படும் புதுவகை போதைப்பொருள் தலைதூக்கியிருப்பதாக எச்டிஎக்ஸ் எச்சரித்துள்ளது. இதுபோன்ற போதைப்பொருள்கள் மரணம் விளைவிப்பதாகவும் அளவுக்கதிகமாக உட்கொண்டோர் பலியாகும் சம்பவங்கள் உலகளவில் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது நான்கு என்பிஎஸ் தொடர்பான மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புதிய ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்ட நிகழ்வில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கலந்துகொண்டார். இதுபோன்ற போதைப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே அடையாளம் காண ஃபர்ஸ்ட் லேப் ஆய்வுக்கூடம் கைகொடுக்கும் என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

