லெங்கோக் பாரு கத்திக்குத்து; ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

லெங்கோக் பாரு கத்திக்குத்து; ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

2 mins read
d7235e02-13a9-4e56-ae62-92abbbb37561
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர். - படம்: சாவ்பாவ்

லெங்கோக் பாரு வட்டாரத்தில் புளாக் 55ல் அண்டைவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் 59 வயது ஆடவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய மற்றோர் ஆடவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் மீது புதன்கிழமையன்று (ஜூலை 22) கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (ஜூலை 20) மாலை 4.45 மணியளவில் கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், 16வது மாடி மின்தூக்கித் தளத்தில் ஆடவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டனர்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் அண்டைவீட்டார் இருவருக்கும் இடையே ஏற்கெனவே நீண்டகாலப் பகை இருந்தது தெரியவந்துள்ளது. இதை அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் 15வது மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட இருவரும் 16வது மாடியில் வசித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடையிலான வாக்குவாதம் காலை நேரத்திலேயே தொடங்கிவிடும் என்று அக்கம்பக்கத்தினர் பகிர்ந்துகொண்டனர்.

ஆனால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

கத்தி ஒன்று 16வது மாடியிலிருந்து வீசப்பட்டதாகவும் அது தரைத்தளத்தில் இருந்த காப்பிக்கடைக்கு முன் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்த நாளன்று காலை 11.45 மணி அளவில் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.

அண்மைய மாதங்களில் கத்தி தொடர்பிலான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் கத்தி தொடர்பான 137 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2024ஆம் ஆண்டின் 131 சம்பவங்களைவிட சற்று அதிகம். கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறை வெளியிட்ட வருடாந்திர குற்றச் சம்பவ எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்கள் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்