ஸ்கூட் விமானம் ஒன்றில் இரண்டு பயணிகள் கைகலப்பில் ஈடுபடுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் வலம் வந்தது.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சீனாவின் ஷான்சி மாநிலம், ஸியான் நகரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய டிஆர்135 விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சாம்பல் நிற உடை அணிந்திருந்த ஆடவர் ஒருவரை, கறுப்பு நிற உடை அணிந்திருந்த மற்றோர் ஆடவர் தடுத்து நிறுத்துவதை அக்காணெளி காட்டியது.
அந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியது.
விமானப் பயணிகளிடையே பதற்றம் அதிகாரிக்க, சண்டையை நிறுத்தும்படியும் அருகில் பிள்ளைகள் இருப்பதாகவும் பயணி ஒருவர் உரக்கக் கூறினார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஸ்கூட் அறிவதாக அது தமிழ் முரசிடம் கூறியது.
“சாங்கி விமான நிலையத்தில் அந்த விமானத்திலிருந்து பயணிகள் இறங்கவிருந்த நேரத்தில், இரண்டு பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக எங்கள் விமானப் பணியாளர்களுக்குத் தெரியவந்தது,” என்று மின்னஞ்சலில் அனுப்பிய தனது அறிக்கையில் ஸ்கூட் குறிப்பிட்டது.
“பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாண்டு அவர்கள் நிலைமையைச் சமாளித்தனர். மேற்கொண்டு எந்த இடையூறுமின்றி பயணிகள் விமானத்தைவிட்டு இறங்கினர்,” என்று ஸ்கூட் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின், பணியாளர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் தலையாய முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய ஸ்கூட், இச்சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.