சைனாடவுனில் நாற்காலிகளை வீசி வன்முறையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபர் தேடப்பட்டு வருகிறார்.
சனிக்கிழமை (நவம்பர் 7) அதிகாலை வேளையில் சைனாடவுனில் உள்ள ஒரு காப்பிக் கடைக்கு வெளியே மூவர் மோதிக்கொண்ட சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
வீவக அடுக்குமாடிக் குடியிருப்பின்கீழ் மூவர் சண்டையிடுவதையும் அவர்களில் இருவர் பிளாஸ்டிக் நாற்காலிகள், சிறிய நாற்காலிகளைத் தூக்கி எறிவதையும் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று காட்டுகிறது.
மூன்றாவது நபர் ஒரு சிறிய நாற்காலியைப் பறிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் தரையில் தள்ளிவிடப்படுகிறார்.
அந்த மோதலில் ஒருவர் கூச்சலிடுவதையும் தகாத வார்த்தைகளைப் பேசுவதையும் கேட்க முடிகிறது.
இச்சமயத்தில் வாகனம் ஓட்டி வந்த ஒருவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சண்டையைத் தடுப்பதற்காக அவர்களை நோக்கிச் செல்கிறார். ஒரு பெண்ணும் குறுக்கிட்டு சண்டையை நிறுத்த முயற்சி செய்கிறார்.
அந்தப் பெண், ஒருவரிடமிருந்து பிளாஸ்டிக் நாற்காலியைப் பறிக்க முயற்சி செய்தபோது அவரும் தள்ளி விடப்படுகிறார்.
பின்னர், நீல நிறச் சட்டை அணிந்த நபர், மற்றொரு நபர்மீது தொடர்ந்து பிளாஸ்டிக் நாற்காலியை வீசி தாக்குவதைக் காண முடிகிறது. இதைத் தொடர்ந்து பொதுமக்களில் சிலர் குறுக்கிட்டு அவரைத் தடுத்துக் கட்டுப்படுத்துகின்றனர்.
இதன் தொடர்பில் ஏஷியாஒன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, சனிக்கிழமை நள்ளிரவு 12.20 மணியளவில் அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் நடந்த சண்டை குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியது.
அங்கு சென்ற அதிகாரிகள், மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் 37 வயது நபரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ய முயற்சி செய்தபோது அவர் ஆபாசமாகத் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மோதலில் ஈடுபட்டது, பொது இடத்தில் போதையில் இருந்தது, அரசு ஊழியரைத் தகாத வார்த்தைகளால் திட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அவரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
பின்னர் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
