தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிச்சனர் சாலை அருகில் சண்டை; ஒருவர் மரணம், மற்றொருவருக்குக் காயம்

2 mins read
79a38531-8e06-48b3-870b-b361fa0a0934
காலை 9 மணிக்கு முன்பே கிச்சனர் சாலையில் உள்ள நோவோட்டெல் ஹோட்டலுக்கும் முஸ்தஃபா சென்டருக்கும் சாம் லியோங் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியைச் சுற்றி காவல்துறையினர் தடுப்பு போட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிச்சனர் சாலைக்கு அருகில் உள்ள கிம் சாம் லெங் காப்பிக்கடையில் சண்டை மூண்டதாகவும் அதில் ஒருவர் மாண்டதாகவும் இன்னொருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் வெர்டுன் சாலையில் செப்டம்பர் 22ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

காலை 9 மணிக்கு முன்பே கிச்சனர் சாலையில் உள்ள நோவோட்டெல் ஹோட்டலுக்கும் முஸ்தஃபா சென்டருக்கும் சாம் லியோங் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியைச் சுற்றி காவல்துறையினர் தடுப்பு போட்டனர்.

கிம் சாம் லெங் காப்பிக்கடைக்கும் சாம் லியோங் ஸ்திரீட் சிக்கன் ரைஸ் உணவகத்துக்கும் அருகில் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இரு கடைகளும் மூடப்பட்டிருந்தன.

சாலையில் செருப்புகள் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நோவோட்டெல் ஹோட்டலுக்கு வெளியில் உள்ள நடைபாதையில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காலை 10 மணி அளவில் கிம் சாம் லெங் காப்பிக்கடைக்கு வெளியே 10க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கூடினர்.

தடுப்புப் போட்ட பகுதிகளின் ஒவ்வொரு முனையிலும் குறைந்தது ஒரு காவல்துறை அதிகாரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் வழிப்போக்கர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கத்திக்குத்து நடந்துள்ளதைப் பதற்றத்துடன் கடை ஊழியர்களிடம் தெரிவித்ததாக அப்பகுதியில் உள்ள காஃபி பீன் அண்ட் டீ லீஃப் கடையின் நிர்வாகி லீ டிங் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

வழக்கமாக, புதன்கிழமை முதல் சனிக்கிழமை இரவு வரை பரபரப்பாக இயங்கும் காப்பி கடை வட்டாரமான அப்பகுதியில் மக்கள் பீர் அருந்தி மதுபோதையில் சுற்றுவது வழக்கம் என்று சையது காஃபே கடையில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் கூறினார்.

அதிகாலை நேரத்தில் தாம் வேலை செய்யும் கடையில் சக ஊழியர்களுக்குக் கூச்சல் சத்தங்கள் கேட்டதாகவும் நடந்தது கத்திக்குத்து எனப் பிறகுதான் தெரியவந்ததாகவும் அருகிலுள்ள சிக்கன் ரைஸ் கடையில் பணியாற்றும் தர்ஷினி கூறினார்.

கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்

குறிப்புச் சொற்கள்