ஈசூனில் சண்டை; சுயநினைவின்றி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

ஈசூனில் சண்டை; சுயநினைவின்றி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
a567a118-9c3e-44ea-a5eb-094cdef13fa0
ஜூலை 24ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஈசூன் ரிங் ரோட்டிலுள்ள புளோக் 243க்கு அருகே நடந்த சண்டை குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. - படம்: ஷின்மின் நாளிதழ்

ஈசூன் வட்டாரத்தில் நடைபெற்ற சண்டை ஒன்றில் 48 வயது ஆடவர் ஒருவர் பலத்த காயமடைந்து, சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஜூலை 24ஆம் தேதி இரவு எட்டு மணியளவில் ஈசூன் ரிங் ரோடு, புளோக் 243க்கு அருகில் சண்டை நடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் அங்கே உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் காயமடைந்த நிலையில் ஒருவரைக் கண்டனர்.

அவரை உடனடியாக கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கொண்டுசென்றனர்.

வாகன நிறுத்தும் இடத்தில் ரத்தக் கரையும் பொருள்களின் சிதறல்களும் காணப்பட்டதாகச் சீன நாளிதழான ஷின்மின் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும், ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, சாலையில் விழுந்து கிடந்த அந்த ஆடவரை முகத்தில் ரத்தம் வழியக் கொடூரமாகத் தாக்கியதாகச் சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்ததாக அது குறிப்பிட்டது.

காவல்துறையினர் வருவதற்கு முன்னரே தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரிடம், பொன்னிற முடி கொண்ட நபர் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஈசூன்சண்டைமருத்துவமனை