காஸாவில் தொடரும் சண்டையால் அப்பாவிக் குடிமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
அத்தகைய செயல்கள் உண்மையிலேயே ஏற்கத்தக்கதல்ல எனவும் புனித ரமலான் மாதத்தில் இவை நடந்திருப்பது இன்னும் வருந்தத்தக்கது எனவும் வியாழக்கிழமை (மார்ச் 20) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் கருத்துரைத்தார்.
“ரமலானின் கடைசி 10 இரவுகளில் நாம் ஒன்றுகூடும்போது, லைலத்துல் கத்ரின் அருளை நாடுவதற்கும் அப்பாற்பட்டு, காஸா மக்கள் உட்பட அவதியுறுவோரின் அமைதிக்காகவும் நிவாரணத்துக்காகவும் தொழுகையில் ஒன்றுகூடுவோம்.
“அவர்கள் வலிமை பெறவும் அவர்களின் சிரமங்களைக் குறைக்கவும், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நெஞ்சார்ந்த பிரார்த்தனையிலும் அவர்களைச் சேர்த்துக்கொள்வோமாக,” என்று திரு மசகோஸ் தமது பதிவில் முஸ்லிம்களிடம் கேட்டுக்கொண்டார்.
காஸாவில் ஓராண்டுக்கும் மேலாக பூசல் தொடர்வதால், அங்கு நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்ட ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் வழக்கமாக நிதி திரட்டி வருவதை அவர் சுட்டினார். சிங்கப்பூரின் தொடர் உதவிக்கு பாலஸ்தீனர்கள் மதிப்பளிப்பதாக களத்தில் உள்ள அதிகாரிகள் தம்மிடம் கூறியிருந்ததாகவும் அவர் சொன்னார்.
“காஸாவில் மனிதநேய நெருக்கடி மோசமடைந்துவரும் வேளையில், அதிகாரபூர்வ மனிதாபிமான முயற்சிகளை ஆதரிப்பதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நமது ஆதரவைத் தொடர ஒன்றுகூடுவோம்.
“லைலத்துல் கத்ரின் வெகுமதிகளைப் பெற்று, நமது பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புடன் நாம் அருள் பெறுவோம். நமது பாலஸ்தீன சகோதரர்கள், சகோதரிகள் அமைதியைப் பெறட்டும்,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான திரு மசகோஸ் தமது பதிவில் கூறினார்.

