காஸாவில் சண்டை தொடர்வது சிங்கப்பூருக்கு மிகுந்த கவலையளிப்பதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் புதன்கிழமை (மார்ச் 19) தெரிவித்தார்.
நிரந்தர சண்டைநிறுத்தத்தை நோக்கி பேச்சுவார்த்தையைத் தொடரும்படி அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்திய அவர், அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின்படி குடிமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
பிணையாளிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் காஸாவுக்கு மனிதாபிமான உதவி அளிக்கப்படுவது தடைபடக்கூடாது எனவும் வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.
தங்களுக்கென சொந்த நாடு கோரும் பாலஸ்தீனர்களின் உரிமைக்காக சிங்கப்பூரின் நீண்டகால ஆதரவை வெளியுறவு அமைச்சு பிப்ரவரியில் மறுவுறுதிப்படுத்தி இருந்தது.
பூசலுக்கு ‘விரிவான, நீடிக்கத்தக்க’ தீர்வை எட்டுவதில் இருநாட்டுக் கொள்கையே மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று சொன்ன அமைச்சு, நிர்வாகத்துக்கும் மறுகட்டுமானத்துக்கும் பாலஸ்தீன ஆணையத்தின் ஆற்றலை மேம்படுத்த அதனுடன் இணைந்து சிங்கப்பூர் அணுக்கமாகப் பணியாற்றும் என்றது.

