ஃபிலிம்கார்ட் சினிபிளெக்சஸ் (Filmgarde Cineplexes) தனது கடைசி திரையரங்கை மூடி திரைத்துறையிலிருந்து விடைபெற்றது.
லெஷர் பார்க் காலாங் கடைத்தொகுதியில் தனது கடைசி திரையரங்கை நடத்தி வந்த ஃபிலிம்கார்ட் சினிபிளெக்சஸ், மார்ச் 23ஆம் தேதியுடன் அதை மூடியது.
திரையரங்கு மூடல் குறித்த தகவலை இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிட்டது.
கடந்த 18 ஆண்டுகளாக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி என அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஃபிலிம்கார்ட் சினிபிளெக்சஸ் 2007ஆம் திரையரங்குத் துறையில் அடியெடுத்து வைத்தது.
“கடந்த சில ஆண்டுகளாகத் திரையரங்குக்கு வருகின்ற மக்கள் கூட்டம் பரவலாகச் சரிந்தது. மேலும் ஓடிடி தளங்களை மக்கள் அதிகமாக நாடுகின்றனர். அவை எங்களுக்குச் சவாலாக அமைந்தது,” என்று ஃபிலிம்கார்ட் சினிப்பிளெக்சஸ் தெரிவித்தது.
பூகிஸ்+, செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதிகளில் செயல்பட்டுவந்த ஃபிலிம்கார்ட் சினிபிளெக்சஸ் நிறுவனத்தின் திரையரங்குகள் 2022ஆம் ஆண்டு மூடப்பட்டன.