நீரிழிவு நோயைக் கண்காணிக்கும் சாதனத்தைப் பெற வழங்கப்படும் 80 விழுக்காடு வரையிலான அரசாங்க நிதி உதவி, இனி அரிய வகை நீரிழிவு நோயாளிகளுக்கும் கிடைக்கும்.
‘தொடர் ரத்த சர்க்கரைக் கண்காணிப்பு’ (சிஜிஎம் - CGM) எனப்படும் அந்தச் சாதனத்திற்கு 30 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
டிசம்பர் 1 முதல் அந்தச் சலுகை நடப்புக்கு வந்தது.
ஏற்கெனவே பிற நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அந்த நிதி உதவி தற்போது புதிதாக இருவகை நீரிழிவு நோயாளிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெறும், தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் அந்தச் சலுகையைப் பெறுவர் என சுகாதார அமைச்சின் பராமரிப்பு ஆற்றல் அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
‘சிஜிஎம்’ என்பது உடலில் பொருத்திக்கொள்ளக்கூடிய ஒரு தொழில்நுட்பச் சாதனம். அதனை உடலில் ஒட்டிக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவை அது தொடர்ந்து கண்காணித்து முடிவைச் சொல்லும்.
உடலில் ஒட்டியிருக்கும் வரை குளுகோசைத் தொடர்ந்து அது கண்காணித்து, அதன் அளவுகளைக் காட்டும். அதனைக் கைப்பேசியில் பார்க்க முடியும். அல்லது அதற்கென உள்ள வாசிப்பு சாதனத்தில் குளுகோசின் அளவைத் தெரிந்துகொள்ளலாம்.
அவ்வப்போது விரலில் ஊசியால் குத்தி ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, தொடர்ந்து அதனைக் கண்காணித்து அளவைக் காட்டுவதால், இன்சுலின் ஊசி மருந்தின் அளவை நோயாளிகளால் எளிதில் மாற்றிக்கொள்ள இயலும்.
ரத்த சர்க்கரை அவர்களையும் அறியாமல் மிதமிஞ்சிச் செல்வதையும் ஆகக் குறைவாக இறங்குவதையும் இதன்மூலம் தடுக்க முடியும் என்று ‘நோவி ஹெல்த்’ எனப்படும் தனியார் மருந்தகத்தின் இணை நிறுவனரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் சூ-ஆன் தோ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆக அண்மையத் தரவுகளின்படி, சிங்கப்பூரில் 400,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்.
கட்டணச் சலுகையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வகை நோயாளிகளில் கணைய நீரிழிவுகளும் அடங்குவர். கணையம் சேதமுற்றதன் காரணமாக, தேவைப்படும் இன்சுலின் சுரக்க இயலாத உடல்நிலையைப் பெற்ற நோயாளிகள் அவர்கள்.
கணையம் நீக்கப்பட்ட புற்றுநோயாளிகளும் அவர்களில் அடங்குவர்.
இருப்பினும், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த நீரிழிவு நோயாளிகளில் அத்தகையோரின் விகிதம் மிகவும் சிறியது என மருந்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதி உதவிக்குத் தகுதிபெறும் இன்னொரு வகை, மோனோஜெனிக் நீரிழிவு.

