சிங்கப்பூரின் நிதி முன்னுரைப்புகள், அடிக்கடி உபரி வரவுசெலவுத் திட்டங்களாக முடிந்ததற்குக் காரணம் நிச்சயமற்ற உலகச் சூழலே என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டது அதற்குக் காரணமன்று என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
கையில் இருக்கும் சிறந்த தரவுகளின் அடிப்படையில் அத்தகைய முன்னுரைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் உலகச் சூழல் மாறிவருவதால் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியைக் கணிப்பது கடினமாகி வருகிறது என்றும் அவர் சொன்னார். நாட்டின் பொருளியல், வெளிப்புறச் சூழல்களைச் சார்ந்திருப்பதை நிதியமைச்சருமான திரு வோங் சுட்டினார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில், பொருள் சேவை வரி உயர்வு குறித்தும் அவர் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) பேசினார். 2023, 2024ல் அதனை உயர்த்தியதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.
2027 நிதியாண்டிலிருந்து வருவாய் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார். நாட்டின் ஒட்டுமொத்தச் செலவினத் தேவைகளும் அதிகரித்துவருவதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம், பொருள் சேவை வரி உயர்வை மறு-மதிப்பீடு செய்யுமாறு கோரியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர், பல்வேறு வரிகளின் மூலம் வருமானம் ஈட்டப்பட்டாலும் நாட்டின் செலவு அதிகரித்துவருவதைச் சுட்டினார். அதற்கு நிதி அளிப்பதில் பொருள் சேவை வரி முக்கியப் பங்களிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பொருள் சேவை வரி, 2023ல் ஏழு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காட்டுக்கும் பின்னர் 2024ல் ஒன்பது விழுக்காட்டுக்கும் உயர்த்தப்பட்டது.
“மூப்படையும் மக்கள்தொகைக்கான சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துவருவதால் பொருள் சேவை வரி உயர்வு அறிமுகம் கண்டது. அந்தச் செலவுகள் நிரந்தரமானவை. அவை தொடர்ந்து கூடும். அதனால் நிலையான, நம்பகமான வருவாய் இருக்க வேண்டும்,” என்று பிரதமர் வோங் விளக்கமளித்தார்.

