ஒன்றிணைக்கவல்லது நுண்கலை: துணையமைச்சர் தினேஷ்

ஒன்றிணைக்கவல்லது நுண்கலை: துணையமைச்சர் தினேஷ்

2 mins read
7ef3fdd0-8cee-4e57-82a2-31160f2bb157
துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தம் துணைவியாருடன் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலை விழாவைக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.  - படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு

இசை, நாடகம் ஆகியவற்றின்வழி நமது சொந்தச் சமூகத்தையும் பண்பாட்டையும் கடந்து, ஆழமான கண்ணோட்டத்தைப் பெற முடியும்.

சிங்கப்பூரின் பன்முகத்தன்மை வாய்ந்த சமுதாயத்தில் இந்தப் பொதுவான அனுபவங்கள் சமூக ஒருமைப்பாட்டையும், அனைவரும் இந்நாட்டைச் சொந்தம் கொண்டாடும் உணர்வையும் வலுப்படுத்தும்.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகக் (சிஃபாஸ்) கலைவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) உரையாற்றியபோது அவ்வாறு கூறினார். 

நுண்கலைகள் மூலம் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்க முடிவதால், சிஃபாஸ் போன்ற அமைப்புகளை அரசாங்கம் ஆதரிப்பதாகத் திரு. தினேஷ் கூறினார்.

சிஃபாஸில் கற்பிக்கப்படும் பாரம்பரியக் கலைகள் உட்பட, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையேயும் இந்தியச் சமூகத்திற்குள்ளும் கலைகள் கருத்துப் பரிமாற்றத்தை உறுதிசெய்வதாக அவர் கூறினார்.

“உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தியச் சமூகத்தை ஒன்றுசேர்க்க முற்படும் ‘இணை’ என்ற குழுவை நான் வழிநடத்துகிறேன். சிஃபாஸின் பங்கேற்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனெனில் நாம் ஒன்றுபட்டு, நமது பாதச் சுவடுகளை வலுவாக்கலாம்,” என்றார் திரு. தினேஷ். 

சிங்கப்பூரின் இந்திய அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் ‘இணை’ அமைக்கப்படுவதாக மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

வெவ்வேறு இந்திய மொழிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிஃபாஸ் நிகழ்ச்சியில் இணைந்திருந்ததைத் திரு. தினேஷ் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

“வங்காளிகள், குஜராத்திகள், மலையாளிகள், தமிழர்கள் என, வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் இங்கு காண்கிறேன். இது அற்புதமான அறிகுறி எனக் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 77ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலை விழா, முடிவில்லாச் சுவை எனப் பொருள்படும் ‘இன்ஃபினிட் ரசா’ (Infinite Rasa) என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 17 முதல் மே 3 வரை நடைபெறவுள்ள அந்த விழா, மிடில் ரோட்டிலுள்ள இந்தக் கலைப்பள்ளியின் புதிய வளாகத்திலும் எஸ்பிளனேட் அரங்கிலும் நடைபெறும்.

1949ல் பன்னிரண்டு உறுப்பினர்களுடன் மட்டும் தொடங்கிய சிஃபாஸ் அமைப்பு, தற்போது 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டுள்ளது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய துணையமைச்சர் தினேஷ், சிஃபாஸ் தற்போது தளம் கொண்டுள்ள மிடில் ரோடு வளாகம், முற்காலத்தில் மருத்துவமனையாக இருந்ததைச் சுட்டினார்.

“இருளிலும் ஒளியை நம்மால் காண முடிந்தது. கலையை ஒளியாகப் பயன்படுத்தித் தற்போதைய இடத்திற்கு நம்மால் செல்ல முடிந்தது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்