சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களில் கையடக்க மின்னூட்டியைப் பயணிகள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், விமான நிறுவனங்களின் விதிமுறையை மதிக்காதவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை, அபராதம் அல்லது அவர்களது கையடக்க மின்னூட்டியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விமானப் போக்குவரத்து மேலாண்மை பாடத்தை நடத்தும் திரு ஜான் டான், “விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்க வேண்டும்,” என்றார்.
அதன் பின்னரும் பயணிகள் அதே தவற்றைச் செய்தால் அவர்களுக்கு அபராதம் அல்லது கருவியைப் பறிமுதல் செய்ய வேண்டும். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றால் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் விமானத்தில் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட வேண்டும், என்று திரு ஜான் கூறினார்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விமான மேலாண்மை பாடத்தை நடத்தும் மூத்த விரிவுரையாளர் கேலப் சிம்மும் திரு ஜானின் கருத்தை ஆதரித்தார்.
“2016ஆம் ஆண்டு சாம்சங் கேலக்ஸி நோட் 7 (Samsung Galaxy Note 7) கைப்பேசியை விமானத்தில் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கைப்பேசி எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால் அது தடை செய்யப்பட்டது. அதேபோல் இப்போதும் பின்பற்ற வேண்டும்,” என்றார் திரு சிம்.
“பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளின் பாதுகாப்புக்குத் தான் நாங்கள் முன்னுரிமை தருகிறோம். எங்களது சிப்பந்திகளுக்கு விமானப் பாதுகாப்புத் தொடர்பான பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களில் பயணிகள் கையடக்க மின்னூட்டி மூலம் தங்களது கருவிகளை மின்னூட்டம் செய்யக்கூடாது. அதேபோல் கையடக்க மின்னூட்டியை மின்னூட்டமும் செய்யக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
விதிமுறைப்படி 100 வாட் அவர் (Wh) வரை சக்திகொண்ட கையடக்க மின்னூட்டிகளை வைத்திருக்கப் பயணிகள் சிறப்பு அனுமதி வாங்கத் தேவையில்லை. அதேநேரம், 100லிருந்து 160 வாட் வரை சக்திகொண்ட கையடக்க மின்னூட்டிகளைக் கொண்டுசெல்லப் பயணம் செய்யும் விமான நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறவேண்டும்.
கடந்த சில மாதங்களாக ஏர் பூசான், பாடிக் ஏர் உள்ளிட்ட விமானங்களில் தீச்சம்பவம் ஏற்பட்டது. அதற்குக் கையடக்க மின்னூட்டி காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து விமான நிறுவனங்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
தாய் ஏர்வேஸ், ஏவா ஏர், சைனா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட ஆசிய விமான நிறுவனங்களும் கையடக்க மின்னூட்டியின் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளன.

