இயந்திர உற்பத்திக் காலத்தில் பலரும் மறந்துபோன கண்ணாடி ஊதும் (glassblowing) கலை சிங்கப்பூரில் திரு தசரத ராமனின் கைகளில் மிளிர்கிறது.
கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் இயங்கிவரும் அவர், தற்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்ணாடிக் கருவிகளை உருவாக்கும் இணை வல்லுநராக ஆய்வுகூடக் கண்ணாடிக் கருவிகளை உருவாக்குதல், செப்பனிடுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்.
அழகுப் பொருள்களிலிருந்து ஆய்வுக்குத் தேவைப்படும் கருவிகள் வரை கண்ணாடியை உருக்கிச் செதுக்கும் அவர், குறிப்பாக அறிவியல் கண்ணாடிக் கருவிகளை ஊதித் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்.
சிங்கப்பூரில் கண்ணாடி ஊதுவதற்கான பட்டயக்கல்வி இல்லை. அதற்கான தேவையும் குறைவு என்ற நிலையில், 1989ல் சென்னையில் இயங்கிய ‘சயன்டிஃபிக் கவர்ன்மென்ட் கிளாஸ் டிரெய்னிங் சென்டர்’ எனும் கல்விக்கழகத்தில் ஈராண்டுப் பட்டயக்கல்வி பயின்றார்.
தசரத ராமன் படித்த அந்தக் கல்விக்கழகமும் இப்போது மூடப்பட்டுவிட்டது. கல்லூரிக் காலத்திலேயே தன்னோடு பயின்ற பலர் பட்டயக்கல்வியைப் பாதியிலேயே கைவிட்டதாகவும் பட்டயம் பெற்றவர்களில் பலர் இத்தொழிலைக் கைவிட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனா முதலிய நாடுகள் கண்ணாடிப் பொருள்களையும் ஆய்வுக்கூடக் கருவிகளையும் பேருற்பத்தி செய்வது இத்துறையின் அவசியத்தைக் காலப்போக்கில் மெல்ல மங்கச்செய்துள்ளது.
எனினும், அறிவியல் கல்லூரி மாணவர்களின் தனிப்பட்ட சோதனைகளுக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட கருவிகள் இச்சந்தைகளில் கிடைப்பதில்லை.
குறித்தவகை ரசாயனங்களின் கொதிநிலை, உறைநிலைக்கு ஏற்றவை உட்படப் பல்வேறு கருவிகள் இச்சோதனைகளுக்குத் தேவைப்படுவதுண்டு. அவற்றை உருவாக்கவும் சேதமடைந்த அறிவியல் ஆய்வுக் கருவிகளைச் செப்பனிடவும் கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் தசரத ராமனை நாடுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“600, 700 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அன்றாடம் வேலை பார்க்க வேண்டும். மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் பணிபுரியவேண்டும். அதேநேரம் பொறுமை இல்லாவிட்டாலோ சிறிதளவு கவனம் சிதறினாலோ அது வேலைத்தரத்தைப் பாதிக்கும்,” என்றார் 54 வயது தசரத ராமன்.
கண்ணாடியின் அழகியலை நன்கறிந்த அவர், நுட்பமான கண்ணாடி வேலைப்பாடுகளையும் பரிசுப் பொருள்களையும் ஓய்வுநேரத்தில் உருவாக்குகிறார்.
1998லிருந்து 2001 வரை சவூதி அரேபியாவின் கிங் ஃபகாத் எரிபொருள், கனிமங்கள் கல்லூரியில் ஆய்வுக்கூடக் கண்ணாடிப் பொருள் உருவாக்கத்தில் பணிபுரிந்த நேரத்தில் மேற்பார்வையாளருக்கு அவர் பரிசளித்த அழகிய கண்ணாடி விலங்குப் பொம்மைகள் இன்றளவிலும் இருவருக்குமிடையே நீடிக்கும் உறவின் பின்னணியாகும்.
2009ஆம் ஆண்டில் தேசியப் பல்கலைக்கழகப் பணியில் சேர்வதற்கான நேர்காணலின்போது சதுரங்கப் பலகை, அதற்கான 32 காய்களைக் கண்ணாடியில் செய்திருந்ததைக் காட்டி நேர்காணல் கண்ட இணைப் பேராசிரியர் லாம் யூலினின் மனத்தை வென்றார்.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழகான கண்ணாடிப் பொருள்களைச் செய்து தருவதோடு, தேசியப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவுக்கும் புகுமுக மாணவர்களுக்குமான கல்லூரி நினைவுப் பொருள்களை வடிவமைத்து, உருவாக்கி வருகிறார் தசரத ராமன்.
ஆய்வுக்கூடக் கருவிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் போரோசிலிக்கேட் கண்ணாடி பரவலாகக் காணப்பட்டாலும் அதன் வெப்ப சகிப்புத்தன்மை சற்றுக் குறைவு. அதைக் கையாள்வதற்குக் கூடுதல் கவனக்குவிப்பு தேவை.
மிகக் கடினமான, 1,000 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான கொதிநிலை கொண்ட குவார்ட்ஸ் கண்ணாடியையும் இவர் பயன்படுத்துவதுண்டு.
இதன் வேலைப்பாட்டில் ஹைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுவது இப்பணியை ஆபத்தாக்குகிறது. இருந்தும், இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கைகளில் காயமேற்பட்டதைத் தவிர, பொதுவாகப் பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்குக் காரணம் தொடர் பயிற்சியும் மனத் தெளிவுமே என்கிறார் அவர்.
சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள்கள், கைத்தொழில்களின்மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த தசரத ராமன், சவூதி அரேபியாவில் கண்ணாடி வேலையைத் தவிர்த்து மரவேலை, தச்சுவேலை எனப் பல திறன்களைக் கற்றுக்கொண்டார். ஆசிரியராகப் பணிபுரிந்த அவரது அப்பா, இல்லத்தரசியான அம்மா இருவரும் தசரத ராமனின் பட்டயக்கல்வியை நேர விரயமாகவே கருதியது அக்காலச் சூழலில் இருந்த கண்ணாடி வேலைப்பாடு குறித்த தவறான கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
அறிவுவழிக் கல்வியைப் பெரிதும் வலியுறுத்தும் சிங்கப்பூரில் அறிவியல் மாணவர்கள் கண்ணாடி ஊதும் தொழில் குறித்து அறிந்திருப்பது அரிது என்பதைக் கவனித்துள்ள அவர், தேசியப் பல்கலைக்கழகத்துக்கு மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வரும் ஐரோப்பிய மாணவர்கள் இதில் அடிப்படைத் திறன்களைப் பெற்றுள்ளனர் என்றார்.
“பயன்படுத்தும் கருவிகளின் தன்மை, வேலைப்பாடு ஆகிய அடிப்படைகள் மாணவர்களின் சிந்தனையை ஆழமாக்கும். சோதனைகளை இன்னும் துல்லியமாக வடிவமைக்கவும் கைகொடுக்கும். இன்னும் பலருக்கு இக்கலை பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் இருப்பது முழுமையான கல்வியைத் தரக்கூடும்,” என்று கூறுகிறார் தசரத ராமன். தேசியப் பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது மாணவர்களுக்கான பயிலரங்குகளை அவர் வழிநடத்துகிறார்.