கருக்கலைப்பு நடந்ததாக பொய்ச்செய்தி; மாதுக்கும் ‘வேக்அப் சிங்கப்பூரு’க்கும் அபராதம்

2 mins read
d54a118e-c25e-4c43-a36d-d91903d90463
‘வேக்அப் சிங்கப்பூர்’ செய்தித்தள நிறுவனர் அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர்,கேகே மருத்துவமனைக்கு மின்னஞ்சல் அனுப்பிய 20 நிமிடங்களுக்குப் பிறகு, மருத்துவமனை பதிலளிக்கும் முன் செய்தியை வெளியிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் (கேகேஎச்) கருச்சிதைவு ஏற்பட்டதாக பொய்யுரைத்த மாதுக்கும் தவறான செய்தியை வெளியிட்ட ‘வேக் அஃப் சிங்கப்பூர்’ செய்தித் தளத்தின் நிறுவனருக்கும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்தது.

மியன்மார் நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான மா சு நந்தர் ஹட்வே, 28, ‘வேக் அஃப் சிங்கப்பூர்’ செய்தித் தளத்தின் நிறுவனர் அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர், 27, இருவரும் அவதூறு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.

போலிக் கதை கூறியதை ஒப்புக்கொண்ட மா சு நந்தர் ஹட்வேக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அரிஃபினுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு மின்னஞ்சல் அனுப்பிய 20 நிமிடங்களுக்குப் பிறகு, அது பதிலளிப்பதற்கு முன்னதாகவே அவர் கதையை வெளியிட்டார்.

மா சு நந்தர் ஹட்வே 2022ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அச்செய்தித் தளத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு அந்தப் பொய்ச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், 2022 பிப்ரவரியில் தான் 20 வார கர்ப்பிணியாக இருந்தபோது கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

அன்று பிற்பகல் 2 மணிக்கு தான் கேகேஹெச் சென்றதாகவும், மாலை 5 மணியளவில் தனது பெண்ணுறுப்பிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார். மாலை 6 மணிக்குத்தான் மருத்துவரைப் பார்க்க முடிந்தது என்றும் அந்த மருத்துவர், “அல்ட்ராசவுண்ட் பரிசோதனை தேவையில்லை, குழந்தை இறந்திருக்கலாம், ரத்தப்போக்கு அதிகமாக உள்ளது,” என்று கூறியதாகவும் அவர் சொல்லியிருந்தார்.

மருத்துவமனை படுக்கையில் குழந்தை “வெளியேற்றி”யதாகவும் பின்னர் சுயநினைவை இழந்த விட்டதாகவும் அவர் கூறினார். தனது குழந்தையின் உடலை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டதாகவும், ஆனால் அந்த சிசு “மருத்துவ கழிவாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேகேஹேச் கூறியது என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 28ஆம் தேதி கொவிட்-19 தொற்றுக்கும் வயிற்று வலிக்கும் சிகிச்சை பெறுவதற்காக கேகேஹெச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்தார் என்பதைத் தவிர, அவர் கூறிய மற்றக் கதைகளெல்லாம் பொய் என்று துணை அரசாங்க வழக்குரைஞர் ஷெல்டன் லிம் கூறினார்.

அதேநாளில் நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர், 2022ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மகனைப் பெற்றெடுத்தார்.

கதை பொய்யானது என்று அரிஃபின் அறிந்ததும் மருத்துவமனையிடம் மன்னிப்புக்கேட்டார்.

குறிப்புச் சொற்கள்