அங் மோ கியோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) பிற்பகல் தீப்பிடித்தது.
சலவை இயந்திரத்தில் கிளம்பிய தீ அந்த வீட்டுக்குள் பரவியதாக நம்பப்படுகிறது.
அங் மோ கியோ ஸ்திரீட் 21, புளோக் 260பி-யின் 20வது மாடியில் உள்ள அந்த வீட்டில் தீப்பிடித்தது பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு பிற்பகல் 3.25 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
வீட்டில் தீ எரிவதைக் காட்டும் காணொளி ஒன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மேல் மாடி வீடுகளின் ஒரு பகுதியை மறைக்கும் அளவுக்கு அந்த வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதைக் காணொளியில் காணமுடிந்தது.
குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் அருகிலிருந்தோர் வாளிகளில் தண்ணீரைப் பிடித்து தீயை அணைத்தனர்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் முழுவதும் 1,954 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. அது, அதற்கு முந்திய ஆண்டில் நிகழ்ந்த 1,799 சம்பவங்களைக் காட்டிலும் 8.6 விழுக்காடு அதிகம்.
மின்சாரக் கசிவும் சமையலறை கவனக்குறைவும் தீப்பிடிப்பதற்கான முக்கிய இரண்டு காரணங்கள் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

