பாலஸ்டியர் தனியார் அடுக்குமாடி வீட்டில் வியாழக்கிழமை (மார்ச் 12) தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை. மின்சாரக் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எண் 20 ஜாலான் ராஜா உடாங்கில் உள்ள குளோபல் வில்லில் உள்ள தனியார் குடியிருப்புக் கட்டடத்தின் 15வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
15வது மாடி வீட்டின் பயனீட்டு அறையில் உள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. நீரைப் பாய்ச்சி தீ அணைக்கப்பட்டது.
இந்நிலையில், மின்சாரத்தை மிதமிஞ்சிய பளுவில் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயன்படுத்தாத மின்சாதனங்களை அணைத்துவிட வேண்டும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.
2024ல் தீ தொடர்பாக 1,990 அழைப்புகள் குடிமைத் தற்காப்புப் படைக்கு வந்துள்ளன. அவற்றில் 968 தீ விபத்துகள், குடியிருப்பு வட்டாரத்தில் நிகழ்ந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிலிருந்து அதிகம் மாற்றமில்லாமல் இருந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் 970 வீடுகளில், தீ மூண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.