பாத்தாம் கப்பல் பட்டறையில் தீ; 13 ஊழியர்கள் உயிரிழப்பு, 18 பேர் காயம்

1 mins read
f6f2e781-e854-45b0-bab1-fbd348b58e7a
கப்பல் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் கப்பலில் இந்தோனீசிய நேரப்படி அக்டோபர் 15 அதிகாலை 4.20 மணிக்குத் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரின் ஏஎஸ்எல் மரின் நிறுவனத்தின் பிரிவு ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் பட்டறையில் தீ மூண்டது. இந்தக் கப்பல் பட்டறை இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் உள்ளது.

தீச்சம்பவத்தில் 13 ஊழியர்கள் மாண்டதாகவும் 18 பேர் காயமடைந்ததாகவும் கப்பல்களைக் கட்டும் நிறுவனமான ஏஎஸ்எல் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) தெரிவித்தது.

கப்பல் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் கப்பலில் இந்தோனீசிய நேரப்படி அக்டோபர் 15 அதிகாலை 4.20 மணிக்குத் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்தபோது அக்கப்பலில் பழுதுபார்ப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

தீச்சம்பவத்தை அடுத்து, அந்தக் கப்பலில் அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக ஏஎஸ்எல் மரின் கூறியது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய இந்தோனீசிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு உதவுவதாகவும் அந்நிறுவனம் கூறியது.

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று அதே ஏஎஸ்எல் மரின் நிறுவனத்தின் பிரிவுக்குச் சொந்தமான பாத்தாமில் உள்ள ஒரு கப்பல் பட்டறையில் தீச்சம்பவம் ஏற்பட்டது. அதில் நான்கு ஊழியர்கள் மாண்டனர், ஐவர் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்