பிரேடல் வியூ வீட்டில் தீ; 100 பேர் வெளியேற்றம்

பிரேடல் வியூ வீட்டில் தீ; 100 பேர் வெளியேற்றம்

1 mins read
1e16aa01-401c-4e41-9612-5fd5ef1e9b25
வீட்டுக்குள் தீ எரிவதையும் கரும்புகை சன்னல் வழியே வெளியேறுவதையும் காணொளி ஒன்று காட்டியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரேடல் வியூ கொன்டோமினிய வீடு ஒன்றில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) மாலை தீப்பிடித்தது.

பிரேடல் வியூ வட்டாரத்தில் உள்ள பிரேடல் ஹில் புளோக் 10F குடியிருப்புக் கட்டடத்தின் ஏழாவது மாடியில் நிகழ்ந்த அந்தத் தீவிபத்தைக் காட்டும் காணொளி ஒன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பகிரப்பட்டது.

வீட்டுக்குள் கடுமையாக தீப்பிடித்து எரிந்ததையும் சன்னல் வழியாக கரும்புகை வெளியேறியதையும் அந்தக் காணொளி காட்டியது.

தீச் சம்பவம் குறித்து இரவு 9.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வீட்டின் சமையலறையில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்ததாகக் கூறப்பட்டது. சிறிது நேரத்தில் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப் பிடித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், அந்தத் தீச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று கூறப்பட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய வாசகர் ஒருவர், தீ விபத்தை அறிந்ததும் கிட்டத்தட்ட 100 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது வீட்டில் இருந்து வெளியேறியதாகக் கூறினார்.

தீ அணைக்கப்பட்ட பின்னர் இரவு 10.45 மணியளவில் ஆறாவது மாடி குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்