மின்சாரக் கோளாற்றால் சிராங்கூன் வீட்டில் தீ

மின்சாரக் கோளாற்றால் சிராங்கூன் வீட்டில் தீ

1 mins read
fea9694f-e978-4cf1-a2a9-fc3cd9c7110f
ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

சிராங்கூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்துக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தீ மூண்டதற்கு மின்சாரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லை. தீயணைப்பு வீரர்கள் வீட்டின் வரவேற்பறையிலிருந்து பூனை ஒன்றை மீட்டெடுத்தனர்.

சிராங்கூன் அவென்யூ 2இல் உள்ள புளோக் 243இல் தீ ஏற்பட்டதாக மாலை 6.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டது.

அங்குச் சென்றடைந்ததும் ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததைத் தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அவர்கள் நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

முன்னெச்சரிக்கையாக, அண்டைவீடுகளில் இருந்த எட்டுக் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மின்கோளாற்றால் தீ ஏற்படுவதைத் தவிர்க்க, பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று குடிமைத் தற்காப்புப் படை ஆலோசனை வழங்கியுள்ளது.

கருவிகள் பயன்பாட்டில் இல்லை என்றால் அவற்றை அணைத்துவிடுவது, கம்பளங்கள் அல்லது பாய்களுக்கு அடியில் கம்பிவடங்கள் செல்லாமல் தவிர்ப்பது, சூடான மேற்பரப்புகளுக்கு அருகே கம்பிவடங்கள் செல்லாமல் தவிர்ப்பது, மின்கலங்கள் அல்லது கருவிகளுக்கு அதிக நேரம் அல்லது இரவு முழுதும் மின்னூட்டுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்