கேலாங் வட்டார வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டையின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைச் சேகரிப்புக்கலனில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9), தீ மூண்டது.
புளோக் 56 கேசியா கிரசென்ட்டில் மூண்ட தீ குறித்துப் பிற்பகல் 2.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் நீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மவுன்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீ, அந்தச் சேகரிப்புக்கலனுக்குள்ளேயே தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் அருகிலிருந்த பொருள்கள் எதுவும் சேதமடையவில்லை என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் தூக்கி வீசப்படும் அறைகலன்கள் போன்ற மிகப் பெரிய பொருள்களைச் சேகரிப்பதற்காக நகர மன்றத்தால் நியமிக்கப்பட்ட துப்புரவுக் குத்தகைதாரர் அங்கு அந்தச் சேகரிப்புக்கலனை வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கலனில் யாரோ வீசி எறிந்த சிகரெட் துண்டால் தீ மூண்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகச் சீன மொழி நாளிதழான சாவ்பாவ் தகவல் வெளியிட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்குத் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் அது கூறியது.
மேலும், தீயினால் அந்தக் கொள்கலனுக்குள் இருந்த அறைகலன்கள் எரிந்து சாம்பலானதாகவும் அது குறிப்பிட்டது.

