புக்கிட் பாத்தோக் 16வது மாடி வீட்டில் தீ: ஒருவர் மருத்துவமனையில்

2 mins read
586deb7c-884a-41e0-a047-e675e1c1d4b8
தீ மூண்டதற்கு மின்சாரம் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: வழிப்போக்கர்

புக்கிட் பாத்தோக்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலை, தீ விபத்து நிகழ்ந்தது.

அந்த வீடு, புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 25ல் உள்ள புளோக் 288ஏயின் 16ஆம் மாடியில் அமைந்துள்ளது.

தீ விபத்து பற்றிய தகவல் செவ்வாய்க்கிழமை காலை 10.55மணிக்கு கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அவ்வீட்டின் படுக்கை அறையில் மூண்ட தீயைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

வீட்டின் மற்ற பகுதிகள் தீயின் வெப்பத்தினாலும் புகையினாலும் பாதிப்படைந்துள்ளன.

தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்னரே அந்த வீட்டில் இருந்து நால்வர் வெளியேற்றப்பட்டனர். அந்த புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மேலும் 20 பேரைக் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் வெளியேற்றினர்.

சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இங் டெங் ஃபோங் பொது மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

படுக்கை அறையில் இருந்த மின்சாதனத்தால் தீ மூண்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த புளோக்குக்கு அருகே இருந்த பன்னோக்கு மண்டபத்தில் பொதுமக்கள் கூடியிருந்தனர். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான 40 வயது மதிக்கத்தக்க நபரும் அங்குப் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கடந்த பிப்ரவரி மாதம் 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் குடியிருப்புகளில் நடந்த தீ விபத்துக்காக உதவிகேட்டு மொத்தம் 968 தொலைபேசி அழைப்புகள் வந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாதனங்களால் ஏற்பட்ட 299 தீ விபத்துகளும் சமையல் செய்யும்போது கவனிக்காமல் விட்டதால் நடந்த 335 தீச் சம்பவங்களும் அத்தகைய சம்பவங்களில் அடங்கும். குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு இவை இரண்டுமே முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்