வியாழக்கிழமை (மார்ச் 12) காலை புக்கிட் பாத்தோக்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் நடந்த தீ சம்பவத்தில் இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புக்கிட் பாத்தோக் தீ; மூச்சுத்திணறல், இதயப் பிரச்சினை
புளோக் 465A புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் உள்ள வீட்டில் தீ விபத்து குறித்த தகவல் காலை 8.20 மணியளவில் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இரண்டாம் மாடியில் இருக்கும் அந்த வீட்டின் வரவேற்பரையில் தீ விபத்து நடந்துள்ளது. அந்த வீட்டின் குடியிருப்பாளர் ஒருவர் புகையால் பாதிப்பு அடைந்து சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த வீட்டில் இல்லாத மற்றொருவர் இதயப் பிரச்சினையால் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காரணத்தை விசாரிக்கும் குடிமைத் தற்காப்புப் படை
குடிமைத் தற்காப்புப் படையின் வருகைக்கு முன்பாக கட்டடத்தின் 60 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனை ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹொங் சுவாங் தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அவர்களது இல்லங்களுக்குத் திரும்பிவிட்டனர். பாதுகாப்புக் கருதி ஒருசிலர் மட்டும் அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு காத்திருக்கின்றனர்,” என்று ஹொங் கா நார்த் பகுதிக்கு பொறுப்பேற்றுள்ள திரு லீ குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதவி
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உணவும் தற்காலிகத் தங்குமிடமும் வழங்கப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.
தீயினால் சேதமடைந்தவற்றை அகற்றவும் மின் இணைப்புகளை சரிசெய்யவும், மீண்டும் சாயம் பூசும் வேலைகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவி வழங்கப்படும். மாற்றுப் படுக்கை மெத்தைகள், வீட்டுக்கான புதிய அத்தியாவசியப் பொருள்கள் அவர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் லீ அவரது பதிவில் விவரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தீச்சம்பவத்திற்கான காரணத்தை குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.

